சந்தனக்கூடு திருவிழாவில் சிவன் கோவிலிலிருந்து அரைத்து எடுத்து வரப்பட்ட சந்தனம் வழங்கப்பட்டது!!

வைப்பார் தர்ஹாவில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவில் மத நல்லிணக்கத்தினை வலியுறுத்தும் விதமாக சிவன் கோவிலிலிருந்து அரைத்து எடுத்து வரப்பட்ட சந்தனம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் என்ற கிராமத்தில், பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த இந்த "மகான் செய்யது சமுசுதீன் ஷஹீது வலியுல்லா" தர்ஹா மற்றும் பள்ளிவாசல் அமைந்துள்ளது. பண்டைய பாண்டிய காலத்தில், ஹஜ்ரத் சம்சுதீன் ஷஹீது வலியுல்லா அன்ஹு, என்பவர் ஏர்வாடியைச் சேர்ந்த பாதுஷா சுல்தான் சையது இப்ராகிம் ஷஹீத்தின் இராணுவத்தில் போர்ப்படை தளபதியாக இருந்து பல போர்களில் வெற்றிவாகை சூடியுள்ளார். 

அப்போது, விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பாற்று படுகையோரம் அமைந்துள்ள கிராமமான இந்த வைப்பார் கிராமத்தில் நடந்தப் போரில் வீரமரணம் அடைந்துள்ளார். இவரது உடல் ஏர்வாடி தர்ஹாவிற்கு முன்பு அடக்கம் செய்யப்பட்டு, அடக்கஸ்தலம் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் போரில் இரத்தம் சிந்திய இடமான இக்கிராமத்தில், இவரின் நினைவாக இந்த தர்ஹாவானது, மிகவும் அழகான மற்றும் அமைதியான சூழலில் ஆன்மீக குணப்படுத்தும் மையமாக செயல்படுகிறது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் அனைத்து மத மக்களும் மதபேதமின்றி இங்கு வந்து ஆசிர்வாதம் பெறுகிறார்கள் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இத்தகைய பழம்பெருமைகளைக் கொண்டுள்ள இந்த வைப்பார் மகான் செய்யது சமுசுதீன் ஷஹீது வலியுல்லா தர்ஹாவில் மதநல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழாவானது மதவேறுபாடின்றி அனைத்து தரப்பு மதத்தினராலும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். 

அதன்படி, இந்தாண்டு கடந்த செப்டம்பர் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் திருவிளக்கு பூஜை இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அதன்படி, அக்கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் வீட்டிலிருந்து நள்ளிரவு 1.30 மணியளவில் சந்தனக்கூடு புறப்பட்டு மிகப்பிரமாண்டமாக வானவேடிக்கையுடன், தப்புதாளங்கள் முழங்க சிலம்பாட்டம் போன்ற நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளுடன் கிராமம் முழுவதும் ஊர்வலமாக சுற்றிவந்து, அதிகாலை 4.30 மணிக்கு தர்ஹாவை வந்தடைந்தது. 

பின் ரவுலா ஷரிபுக்கு சந்தனம் பூசப்பட்டு, பின்னர் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அந்த விஷேசமான சந்தனம் பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும் இந்த சந்தனம் அங்குள்ள சிவன் கோவிலில் அரைத்து எடுத்து வந்த பயன்படுத்துப்பட்டது குறிப்பிடதக்கது. மேலும் இங்கு நடைபெறும் விளக்கு பூஜையில் மதப்பாகுபாடின்றி, இந்து, கிறிஸ்துவர், இஸ்லாமியர் என பலதரப்பட்ட மதத்தினரும் ஒற்றுமையாக கலந்துகொண்டு மத ஒற்றுமையைப் போற்றும் விதமாக அகல் விளக்கேற்றி வழிபட்டனர். 

மேலும் இந்த விளக்குகள் அணையாமல் விடிய விடிய எண்ணெய் ஊற்றி எரியூட்டப்படும் எனக் கூறப்படுகிறது. தமிழகத்திலேயே இந்த ஒரே ஒரு தர்ஹாவில் மட்டும் தான், இந்துக் கோவில்களில் வழங்கப்படுவதைப் போல விபூதி மற்றும் பிரசாதங்கள் வழங்கப்படுகிறது என்பது தனிச்சிறப்பாக பார்க்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற சந்தனக்கூடு திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-ந.பூங்கோதை.

Comments