கோவைபுதூர் ஆஸ்ரம் பள்ளியில் முத்தமிழ் மன்றம் துவக்கம்!!
பள்ளி மாணவர்கள் தமிழின் சிறப்புகளை தெரிந்து கொள்ளும் விதமாக கோவைபுதூர் ஆஸ்ரம் பள்ளியில் முத்தமிழ் மன்றம் துவங்கப்பட்டது.
தமிழர் கலை, கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல் முறைகள்,என உட்பட தமிழ் மொழியின் பெருமைகள் குறித்து இளம் மாணவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் முத்தமிழ் மன்றம் துவங்கப்பட்டது.
இதில் பள்ளியின் தாளாளர் தேவேந்திரன் கும்ப மரியாதையுடன் பரிவட்டம் கட்டி தமிழ் மரபுபடி வரவேற்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர், ஓலை சுவடியை வாசித்து முத்தமிழ் மன்றத்தை துவக்கி வைத்தார். இதில் பறையிசை முழங்க கூடியிருந்த மாணவர்கள் தமிழ் வாழ்க என முழங்கினர்.
தொடர்ந்து திருவள்ளுவர்,சுப்ரமணிய பாரதி, பாரதிதாசன், ஔவையார், வள்ளலார், பாரதமாதா, முத்தமிழறிஞர் கலைஞர் என வேடமிட்ட மாணவ,மாணவிகள் மேடையை அலங்கரித்தனர்.
இது குறித்து பள்ளியின் நிர்வாகி கவுரி உதயேந்திரன் கூறுகையில், தமிழ் மொழி, அது சார்ந்த இயல், இசை, நாடகம் என இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க, தமிழர் கலை, கலாச்சாரம், பண்பாடுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில், இந்த மன்றம் செயல் படும் எனவும், மேலும், இலக்கிய ஆர்வமுடைய பள்ளி மாணவ மாணவியருக்காக தமிழ் மன்றம், பேச்சு, கவிதை முதலிய போட்டிகளை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
இளம் மாணவர்களிடையே, ஒளிந்திருக்கும் தனித்துவத்தையும் தமிழ் ஆர்வத்தையும் வெளிக்கொண்டு வரும் வகையில்,இலக்கிய போட்டிகள், சிறப்பு பட்டிமன்றங்களை நடத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.
விழாவில் பள்ளியின் செயலர் ரவிக்குமார்,முதல்வர் சரண்யா,வித்நாஸ்ரம் பள்ளி நிர்வாக இயக்குனர் சவுந்தர்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-சீனி, போத்தனூர்.
Comments