குறளுக்கு புதுமை உரை எழுதிய கலைஞர்!!! நீதிபதி முகமது ஜியாவுதீன் நெகிழ்ச்சி!!

கல்வியின் பெருமை குறித்து விளக்கம் அளித்த திருக்குறளுக்கு பகுத்தறிவு சிந்தனையுடன் தமிழக முன்னாள்  முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் புதுமையாக, புரட்சி சிந்தனையுடன் உரை எழுதியுள்ளார் என கோவையில் முன்னாள் மாவட்ட நீதிபதி, ஆணைய உறுப்பினர், கவிஞர் அ.முகமது ஜியாவுதீன் வியந்தும், நெகிழ்ச்சியுடனும் பேசினார்.

கோவை  நகரத்தில் உக்கடம் - சுங்கம் பைபாஸ் ரோடு ஜி.எம்.நகரில் கல்வி களஞ்சியம் முன்னாள் மாணவர்கள் நலச்சங்கம் மற்றும் அத்தியாயம் அறக்கட்டளை இணைந்து நூலகம் மற்றும் நீட் பயிற்சி, மாநில அரசு வேலை வாய்ப்புக்கான இலவச பயிற்சி மையம் திறப்பு விழா கடந்த 10.6.2024 திங்கள் மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

விழாவில், கல்வி களஞ்சிய தலைவர் T.H. அப்துல் நசீர் தலைமை தாங்கினார். கல்வி களஞ்சிய செயலாளர் M. அமானுல்லா வரவேற்று பேசினார். கௌரவ ஆலோசகர்கள் J. முஹம்மது முத்து, S.A. அப்பாஸ், P.A.R. ஷாஹுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தமிழ்நாடு அரசின் மாநிலச் சட்ட ஆட்சி மொழி ஆணைய முழுநேர உறுப்பினரும், முன்னாள் மாவட்ட நீதிபதியுமான அ. முகமது ஜியாவுதீன் பயிற்சி மையத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

கோவை மாநகர காவல், மேற்கு பகுதி உதவி ஆணையாளர் ஆ. வீரபாண்டி, கோவை மாநகர மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் கோட்டை அப்பாஸ், கோவை B-4 காவல் நிலைய ஆய்வாளர் K. ரமேஷ்குமார்  M.M. சர்புதீன், K. கணேஷ், எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா, H. முஹம்மது சேட், மு.சு. சித்தீக், கர்னல் கீரீஷ் பார்த்தன், கவிஞர் அமுதன் இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணைய முழுநேர உறுப்பினரும் முன்னாள் மாவட்ட நீதிபதியுமான அ. முகமது ஜியாவுதீன் கல்வி பயிற்சி மையத்தை திறந்து வைத்து பேசியதாவது:

பாடத்திட்டங்களோடு, தினமும் செய்தித்தாள்களை படிக்கும் பழக்கத்தை வழக்கத்தில் கொள்ள வேண்டும். வேலையில்லா திண்டாட்டம் உலகம் முழுவதும் இருந்து வருகிறது. எந்த வேலைக்கு விண்ணப்பிக்கிறோமோ அதற்குரிய தகுதிகளையும் திறமைகளையும் இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். படித்த இளைஞர்கள் தங்களுக்கு என்ன தெரியும் என்பதை விட தெரிந்தவற்றை வைத்து என்ன செய்ய போகிறார்கள் என்பதில் தான் கவனம் செலுத்த வேண்டும்.

 உலகம் உங்கள் செயல்களையும் அதனால் வரும் விளைவுகளையும் தான் கருத்தில் கொள்கிறது. இங்கே முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு கிடைக்காத வாய்ப்பு அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த அமைப்பை தொடங்கி இருக்கிறீர்கள்.

 தர்மத்தை விட உங்களது இந்த செயல் உயர்வானது காரணம் தர்மம் கிடைத்ததில் இருந்து கொடுப்பது. ஆனால் நீங்கள் உங்களுக்கு கிடைக்காததை பிறருக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் அதற்காக வழி காட்டுவதற்காகவும் தொடங்கி இருக்கிறீர்கள். 

இதனை தொடங்கிய இளைஞர்கள் அரசு வேலையில் இல்லாதவர்கள் ஆனால் அரசு வேலைக்குரிய வழிகாட்டுதலும் பயிற்சியும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த அமைப்பை தொடங்கி இருக்கிறீர்கள். 

டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள்

அந்த உயர்ந்த உள்ளத்தை நான் மனதார பாராட்டுகிறேன். ஆனால் எந்த ஒன்றையும் தொடங்குவது சுலபம் தொடர்ந்து நடத்துவது கடினம் என்று சொல்லுவார்கள்.  நீங்கள் அனைவரும் எப்போதும் ஒற்றுமையோடும் முழுமையான ஒத்துழைப்போடும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும்.

இங்கே நூலகம் அமைத்து இருக்கிறீர்கள். மாணவர்களும் இளைஞர்களும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். கைபேசியில் எல்லாம் கிடைக்கிறது என்று இப்போது நினைக்கிறார்கள். 

ஆன்லைனில் படிக்க முடியும் என்றாலும், ஆன்லைனில் படிப்பதில் கவனச்சிதறல்கள் அதிகமாக ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. புத்தகத்தில் படிப்பது தான் எந்த ஒன்றையும் கவனம் ஒன்றி படிக்கவும் படித்ததை மனதில் வைக்கவும் உதவி செய்யும்.

கல்வியில் பின்தங்கி இருக்கிற ஒரு சமூகம் பொருளாதாரத்தில் முன்னேற முடியாது. கல்வியில் பின்தங்கி இருக்கிற சமூகம் தங்களுக்கான உரிமைகளை பெற முடியாது. கல்வி மட்டும் தான் எல்லா செல்வங்களையும் விட உயர்ந்தது என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து” என்கிறார் திருவள்ளுவர்.

 அந்த திருக்குறளுக்கு உரையாசிரியர்கள், ஒரு பிறவியிலே ஒருவன் கற்ற கல்வியானது, அவனுக்குத் தொடர்ந்து வரும் ஏழு பிறப்புக்களிலும் பாதுகாக்கும் சிறப்புடையது ஆகும் என்று எழுதினார்கள். 

ஆனால் பகுத்தறிவுச் சிந்தனையில் நம்பிக்கை கொண்ட ‘முத்தமிழ் அறிஞர்’ கலைஞர் மு. கருணாநிதி அவர்கள், ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும் என்று புரட்சிகரமாக புதுமை உரை எழுதி இருக்கிறார்.

ஒருவர் நன்றாக படித்து நல்ல நிலைக்கு உயர்ந்தால் அவரது குழந்தைகளை படிக்க வைப்பார்கள். அதன் மூலம்,  வாழையடி வாழையாக கல்வி தொடரும். அது மட்டுமல்ல ஒருவர் கல்வி கற்று நல்ல ஒரு வேலையில் அமர்ந்தால் அவரின் மூலமாக அவரை சுற்றி இருக்கிற உறவினர் மற்றும் நண்பர்கள் எல்லோரும் பயன்பெற முடியும், படித்தவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்ட முடியும்.

ஒவ்வொரு வீடுகளிலும் திருக்குறள் இருக்க வேண்டும். எல்லா செல்வமும் அழியக்கூடியது. கல்வி மட்டும் தான் அழியாத செல்வம் என்று திருக்குறள் வலியுறுத்துகிறது.

இந்த நிகழ்ச்சியில் அதிகமாக பெண்களும் தாய்மார்களும் கலந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.  பெண்கள் படித்தால் மட்டும் தான் உண்மையான முன்னேற்றத்தை ஒரு சமூகம் அடையும். ஏழைகள் மற்றும் வசதி இல்லாதவர்களுக்கு உதவி செய்கிற எண்ணத்தை ஒவ்வொருவரும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். 

மாணவர்கள் தினம் தினம் செய்தித்தாள்களை படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற்ற தலைவர்களும், தொழில் துறையில் பெரிய அளவில் முன்னேறியவர்களும் தினமும் செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தை கொண்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 

தினமும் பத்திரிக்கை படிக்கிற போது உலக நடப்புகளை அறிந்து கொள்வதோடு பொது அறிவு வளர்த்துக் கொள்ள முடியும். 

போட்டித் தேர்வுகள் எழுதும் போது பொது அறிவு நமக்கு பயன்படும். பொது அறிவை தொடர்ந்து புத்தகங்கள் படிப்பதன் மூலமும் தினமும் செய்தித்தாள் படிப்பதன் மூலமும் சேகரித்துக் கொள்ள வேண்டுமே தவிர தேர்வுக்கு முதல் நாள் நோட்ஸ் படிப்பது உதவாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். 

எனவே மாணவப் பருவத்திலிருந்து நல்ல புத்தகங்களை தேடி படிக்கிற பழக்கத்தையும் தினமும் செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தையும் வளர்த்துக் கொண்டால் வாழ்க்கையில் நிச்சயமாக தாங்கள் விரும்பும் உயரமான இடத்தை அடையலாம்.


முன்னாள் மாவட்ட நீதிபதி, ஆணைய உறுப்பினர், கவிஞர் முகமது ஜியாவுதீன் அவர்கள்

சின்ன வயதில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வறுமையின் காரணமாக நண்பர்கள் உறவினர்கள் மத்தியிலே ஒதுக்கப்பட்டவர்கள் படித்து உயர்ந்து எல்லாராலும் மதிக்க கூடிய இடத்திற்கு உயர்ந்து இருக்கிறார்கள். படிப்பதால் மதிப்பு உயரும். படிப்பதால் செல்வம் சேரும். நியாயமான முறையில் சேர்த்த செல்வத்தால் அருளையும் இன்பத்தையும் அடைய முடியும். 

 இளம் வயதிலேயே நல்ல ஒழுக்கத்தையும் பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தையும் தொடர்ந்து படிக்கும் பழக்கத்தையும்! வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு முன்னாள் மாவட்ட நீதிபதியும் ஆணைய உறுப்பினருமான அ.முகமது ஜியாவுதீன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கல்வி களஞ்சிய கௌரவ ஆலோசகர்  நூர் முஹம்மது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில்  அப்பாஸ் நன்றி கூறினார்.

-ஆர்.கே.விக்கிரம பூபதி.



Comments