தமிழகத்தில் ஊரக,உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளால் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த தொழில் முனைவோர் பெரும் பாதிப்பு!! தேசிய செயலாளர் ஹென்றி கோரிக்கை!!
தமிழகத்தில் ஊரக,உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளால் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த தொழில் முனைவோர் பெரும் பாதிப்புள்ளாகி வருவதாகவும்,தமிழக அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்தி, இறுதி ஒப்புதல் கோரி விண்ணப்பித்தால் பதினைந்து நாட்களுக்குள் அனுமதி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் ஹென்றி கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவையில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கோவை மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.. ஃபேரா கூட்டமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் நேரு நகர் நந்து, தேசிய செயல் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில்,
கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய செயலாளர் ஹென்றி ,ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பல்வேறு சவால்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பதிவுத்துறையில் பன்மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிற நிலங்களின் மீதான அரசு வழிகாட்டி மதிப்பு குறித்த வரைவு தற்போது பதிவுத்துறை இணையதளத்தில் மட்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், கிராமப்புறங்களில் இருக்கிற பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியாமல் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
எனவே இந்த அரசு வழிகாட்டி மதிப்பு உயர்வு குறித்த வரைவு சம்பந்தமான தகவல்களை சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களின் வெளியில் உள்ள தகவல் பலகையில் ஒட்டி, வகைபாடு மதிப்பின் அடிப்படையில் இல்லாமல், தெரு மதிப்பு மற்றும் சர்வே எண் மதிப்பின் அடிப்படையில் நிர்ணயித்து, அதனை அனைத்து பொதுமக்களும் அறியும் வண்ணம் புதிய வழிகாட்டி மதிப்பு வரைவினை வெளியிட வேண்டும் என கேட்டு கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், ரியல் எஸ்டேட் துறை சார்ந்த தொழில் செய்து வருபவர்களுக்கு தற்போது ஊரக உள்ளாட்சி துறையில் உள்ள தலைவர் மற்றும் பிரதிநிதிகளால் மிகப்பெரிய பிரச்னைகள் இருப்பதாக கூறிய அவர், ரியல் எஸ்டேட் செய்யும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்காமல், எங்களை நசுக்குகின்ற வகையி்ல்,ஒரு ஏக்கருக்கு பத்து இலட்சம் ரூபாய் வேண்டும் என பங்கு கேட்பதாக வேதனை தெரிவித்தார்.
அனைத்து ஆவணங்களும் அரசு விதிகளின் படி சரியாக இருந்து தரச்சான்றிதழ் கொடுத்தாலும் இறுதி ஒப்புதல் தருவதற்கு ஊரக,உள்ளாட்சி தலைவர்கள் இழுத்தடித்து பாடாய் படுத்துவதாக கூறிய அவர்,இதனால் நிம்மதியாக தொழில் செய்ய முடிவதில்லை என வேதனையுடன் கூறினார்.எனவே தயவு செய்து இதை அரசு கவனத்தில் எடுத்து இறுதி ஒப்புதல் கோரி விண்ணப்பித்தால் பதினைந்து நாட்களுக்குள் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
-சீனி, போத்தனூர்.
Comments