வெடிப்பொருட்கள் என கூறி ஆன்லைன் மோசடி!! கோவையில் சிக்கிய நபர்கள்!!!

பொட்டாசியம் குளோரைடை சில வேதி பொருட்களுடன் கலந்து வெடிபொருட்கள் என கூறி ஆன்லைனில் மோசடியாக விற்க முயன்ற 2 பேர் கோவையில் சிக்கினர்.

கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த 2022ம் ஆண்டு காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது கிலோ கணக்கில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், அவர் ஆன்லைன் மூலம் வெடிபொருட்களை வாங்கியது தெரியவந்தது. 

அதன்பின்னர் கோவை மாநகர நுண்ணறிவு போலீசார் ஆன்லைனில் வெடிபொருட்கள் விற்பனையை கண்காணித்து வருகின்றனர். 

இந்நிலையில், கோவை கரும்புக்கடையை சேர்ந்த சிலர் தங்களிடம் வெடிபொருட்கள் உள்ளதாகவும், அதனை ஆன்லைனில் விற்க முயன்றதாக தெரிகிறது. இது குறித்து கரும்புக்கடை போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் கரும்புக்கடையை சேர்ந்த சிலரை பிடித்து விசாரித்தனர். 

விசாரணையில், அவர்கள் தொண்டாமுத்தூர் அடுத்த சென்னனூர் பகுதியில் குடோன் எடுத்திருப்பதாகவும், அங்கு மூட்டைகளில் ரசாயன பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து கோவை மாநகர (தெற்கு) போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார், கரும்புக்கடை போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் குறிப்பிட்ட அந்த குடோனுக்கு விரைந்து சென்றனர். 

அங்கு மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருந்த ரசாயன பொருட்களை கைப்பற்றி ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில் மூட்டைகளில் இருந்தது பொட்டாசியம் குளோரைடு என்ற உரம் என்பது தெரியவந்தது. இதனை பதுக்கிய கும்பல் அதில் பிளீச்சிங் பவுடர் மற்றும் சில வேதிப்பொருட்களை கலந்து வெடிபொருட்கள் என மோசடியாக விற்க முயன்றது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘தகவலின் அடிப்படையில் குடோனுக்கு சென்று சோதனை செய்ததில் அங்கு 50 மூட்டைகளில் பொட்டாசியம் குளோரைடு இருந்தது. இதில் சில வேதிப்பொருட்களை கலந்து அதனை வெடிபொருட்கள் என மோசடியாக ஆன்லைன் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றுள்ளனர். இது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்தும் விசாரணை நடக்கிறது.’’ என்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments