வரலாற்றில் இன்று!! வந்தவாசிப் போர்!!!

 

ஜனவரி 22-வந்தவாசிப்போர் நடந்த நாள். இந்திய வரலாற்றில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த நாள். 264 ஆண்டுகளுக்கு முன்பு இதே தேதியில் நடந்த வந்தவாசிப் போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதால் அடுத்த 187 ஆண்டுகள் நாம் அடிமைப்பட்டே கிடந்த அவல நிலைக்கு வழிவகுத்த நாள்.

மே மாதம் 29 ம் நாள் 1453ல் ஆட்டோமானியப் பேரரசின் துருக்கியர்கள் ரோமானியப் பேரரசுக்குச் சொந்தமான தங்க ஆப்பிள் என்றழைக்கப்பட்ட இன்றைய இஸ்தான்புல் எனப்படும் கான்டாண்டி நோபிள் நகரைக் கைப்பற்றியதால் ஐரோப்பியர்களின் ஆசியாவுக்கான வணிகப் பாதை மூடப்பட்டது. எனவே 1498ல் வாஸ்கோடகாமா புதிய வழியை கண்டறிந்து கேரளா கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார். போர்த்துக்கீசியர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டேனியர்கள், கடைசியாக ஆங்கிலேயர்கள் என வணிகப் போட்டி ஆரம்பமானது.


1757 பிளாசிப் போரால் ஆங்கிலேயர்களுக்கு இந்தியாவில் வணிக உரிமை கிடைத்தது. 1760 வந்தவாசிப் போர் ஆட்சி உரிமையைத் தந்தது. வந்தவாசிக் கோட்டை மராட்டியர்களால் கட்டப்பட்டது.ஒன்றரைக்கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. நீள்சதுர வடிவம் கொண்டது.

மொகலாயர்கள் காலத்தில் ஜாகீர்தாரி முறையில் ஆற்காடு நவாப்புகளுக்கு வந்தவாசி ஜாகீரும் கிடைத்தது. 1690 முதல் நவாப்புகள் தென்னிந்தியாவில் வரி வசூல் செய்தனர். 1749ல் ஆட்சிக்கு வந்த முகமது அலிகான் வாலாஜா(வாலாஜா என்பது பெயர்)என்பவர் பிரெஞ்சுப்படை அதிகாரிகளை வந்தவாசிக் கோட்டையில் தங்குவதற்கு அனுமதித்தார். அப்பொழுது முதல் பிரெஞ்சு இராணுவத் தளமாக வந்தவாசி மாறியது.


இரண்டே ஆண்டுகளில் 1751ல்  இராபர்ட் கிளைவ் ஆற்காட்டைக் கைப்பற்றினார். எனவே வந்தவாசியில் பிரெஞ்சுப்படைகளைக் காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வந்தவாசியைக் கைப்பற்ற1752,1757,1759  என தொடர்ந்து ஆங்கிலேயர்கள் முயற்சி செய்து 1760 ஜனவரி 22ல் வெற்றியடைந்ததால் இந்தியா அடிமையானது.

ஆங்கிலேயப்படையில் 2754 சிப்பாய்கள்,பிரெஞ்சுப்படையில் 12000 சிப்பாய்கள். ஆங்கிலேயப்படையில் 14 பீரங்கிகள்,பிரெஞ்சுப்படையில் 25 பீரங்கிகள். ஆங்கிலேயர்களுக்கு சிகப்பு கோட் பிரெஞ்சுக்காரர்களுக்கு வெள்ளைக்கோட். ஆங்கிலேயப்படைகள் 3 இடங்களில் அணிவகுத்து நின்றனர். பிரெஞ்சுப்படைகள் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டனர். வந்தவாசிக் கோட்டையைச் சுற்றிலும் பாதுகாப்புப் பணியில் 960 பிரெஞ்சு வீரர்கள். அமைதியான குணம் கொண்ட ஆங்கிலேயப் படைத்தளபதி சர் அயர் கூட்டின் வயது 34. வாய்க்கொழுப்பு கொண்ட பிரெஞ்சுப்படைத் தளபதி ஜெனரல் லாலியின் வயது 58. லாலியின் குதிரைப்படைக்கு யாரும் தலைமை ஏற்க மறுத்ததால் தானே தலைமை தாங்கினார். போர் தொடங்கியது. கர்னல் சர் அயர் கூட் தனது வீரர்களுக்குச் சொன்ன முதல் வார்த்தை இந்தியா நமது கையில் என்பதுதான். 

காலை 7 மணிக்கு முதல் துப்பாக்கிச்சூடு 9 மணிக்கே ஆங்கிலேயப் படைகள் முன்னேறின. 11 மணிக்கு பிரெஞ்சுக் குதிரைப்படைகள் பின்வாங்கின. 12 மணிக்கு ஆங்கிலேயப்பீரங்கிகள் குண்டு மழைகளைப் பொழிந்தன. சரியாக மதியம் 2 மணிக்கு பிரெஞ்சுப்படைகள் வந்தவாசிக்கோட்டையைக் காலி செய்துவிட்டு ஓடிவிட்டனர். 

ஏழு மணி நேரமே போர் நடந்தது.பிரெஞ்சுப்படையில் 800 பேர்களும் ஆங்கிலேயப்படையில் 190 பேர்களும் இறந்துகிடந்தனர். வெறும் 20 பேர்களுடன், ஜெனரல் லாலி, பாண்டிச்சேரிக்கு தப்பி ஓடினார். பின்பு 1761 ஜனவரி 15ல் ஆங்கிலேயர்களிடம் சரணடைந்தார்.

தனது 7 வயதில் பிரான்ஸ் நாட்டின் இராணுவக் கொடிகளைத் தூக்கிச்சுமக்கும் orderly boy யாக இராணுவத்தில் சேர்ந்தவர் 42 வயதில் அவர் பெயரிலேயே ஒரு ரெஜிமண்ட் 55 வயதில் ஆர்டர் ஆப் செயிண்ட் லூயிஸ் என்ற சிறப்புப் பட்டம் எனச்சிறந்து விளங்கிய ஜெனரல் லாலி மீது ராஜ துரோகம் சுமத்திய பிரெஞ்சு அரசின் ஆணையால் 9.5.1766 ல் அவரது தலை வெட்டப்பட்டது.

சர் அயர் கூட் 1762ல் கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையை ஏற்றார். உயரிய வீரவாள் விருது தரப்பட்டது. 1769ல் செயின்ட் ஹெலினா தீவின் கவர்னர் மகளை மணந்தார்.சர் பட்டம் 1771ல் வந்தது. 1783ல் அயர்கூட் இறந்த போது, லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் அவருக்கு நினைவுத் தூணை ஆங்கில அரசு நிறுவியது.

வந்தவாசிப் போரைக் குறிப்பிடும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பிரெஞ்சுப் படைக்கு இருந்த சம்பள பாக்கியும் சரியான சாப்பாடு கிடைக்காமையுமே அவர்களின் தோல்விக்கு காரணங்கள் என ஒரு ஓரத்தில் எழுதியுள்ளனர்.

சாப்பாடு முக்கியமல்லவா…

-எம்.எஸ்.முத்துசாமி.

22.1.2024.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments