பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள்!! இருசக்கர வாகனத்தில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய இரண்டு இளைஞர்கள்!!!
நவீன மயமாக்கப்பட்ட உலகில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக மொபைல் போன் செயலி மற்றும் கணிணி தொழில்நுட்பங்கள் மூலம், அதிகளவில் பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து சைபர் கிரிமினல்கள் குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த குற்றங்களில் பெண்கள் மட்டுமின்றி பள்ளி செல்லும் குழந்தைகளிடம், செயலிகள் வாயிலாக தொடர்பு கொண்டு, தவறான பாதைக்கு அழைத்து செல்லும் சைபர் குற்றங்களும் மேலும் மேலும் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இரண்டு தன்னார்வலர்கள் விழிப்புணர்வு வாகன பயணத்தில் ஈடுபட்டதற்கான தொடக்க நிகழ்ச்சி கோவை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கி வைத்தார்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த தன்னார்வலர்களான சங்கர்ராஜ் மற்றும் தினேஷ்குமார் ஆகிய இருவரும் இருசக்கர வாகன பயணத்தின் மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். கோவை மாவட்டத்தில் இருந்து பூடான் நாட்டின் திம்பு வரை இரு சக்கர வாகனத்தில் 14 நாட்களுக்கு சுமார் 6 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம், இருசக்கர வாகனத்தில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
இது குறித்து சைபர் குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு பயணம் செல்லும் இளைஞர்கள் கூறுகையில், இந்த விழிப்புணர்வு பயணம் முழுக்க முழுக்க குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செல்கிறோம். 14 நாட்கள் 6 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரமாக பூடான் செல்ல உள்ளோம்.
அந்த நாட்டில் உள்ள பள்ளி கல்லூரிகளிலும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண் குழந்தைகள் , பெண்கள் மற்றும் நிறுவனங்கள் என பல இடங்களில் சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வில் ஈடுபட இருக்கிறோம். இதற்காக கோவை மாவட்ட போலிசார், இந்தியா மற்றும் பூடான் அரசாங்கம் முழு ஒத்துழைப்பை தருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.
Comments