சென்னையில் சைக்கோ கொள்ளையன் கைது!!!

  -MMH

சென்னையில் சைக்கோ கொள்ளையன் கைது!!!

  சென்னையில் வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களை கொலை செய்து, நகை-பணத்தை கொள்ளையடித்த 'சைக்கோ' கொள்ளையன் "கத்தி இன்றி, ரத்தம் இன்றி, வலி இல்லாமல் அவர்களை தீர்த்துக்கட்டியதாக'' பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- "சென்னை ஆதம்பாக்கம், தில்லை கங்காநகர், 12-வது தெருவில் வசித்த சிவகாமிசுந்தரி என்ற 81 வயது பெண் வீட்டில் தனியாக இருந்த போது பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். அவர் அணிந்திருந்த மற்றும் வீட்டில் இருந்த 45 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

கடந்த 21-ந்தேதி நடந்த இந்த கொலை வழக்கில் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் 48 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்ய தீர்மானித்தோம். நான், இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி, துணை கமிஷனர் தீபக் சிவாச் ஆகியோருடன் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டேன். கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. வீட்டு கதவு உள்பக்கம் பூட்டப்பட்ட நிலையில் கொலை நடந்துள்ளது. மேலும் நகை-பணமும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கொலையாளி வீட்டுக்குள் எப்படி நுழைந்தான் என்பது புரியாத புதிராக இருந்தது. கொஞ்சம் சவாலான வழக்காக இருந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த வழக்கில் துப்பு துலக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா எங்களுக்கு இந்த வழக்கில் துப்பு துலக்க ஏதுவாக இருந்தது. கண்காணிப்பு கேமராவில் நீலகலர் சட்டை அணிந்த ஒருநபர் முகத்தில் நீலகலர் முககவசம் அணிந்த நிலையில் நீலநிற குடை பிடித்துக்கொண்டு, அந்த பகுதியில் தொடர்ந்து 4 நாட்கள் சுற்றிக் கொண்டிருந்தது பதிவாகி இருந்தது. அந்த நபர் கொலை செய்யப்பட்ட பெண்ணிடம் பேசும் காட்சியும் கேமராவில் காணப்பட்டது. அதே நபர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீடு வேலைக்காரி செல்வதற்காக திறக்கப்பட்ட போது, நைசாக வீட்டுக்குள் செல்லும் காட்சியையும் கேமரா காட்டியது.

ஆக அந்த நீலகலர் சட்டைகாரன்தான் கொலைகாரன் என்பதை ஓரளவு புரிந்து கொண்டோம். ஆனால் அந்த கொலைகாரன் பழைய குற்றவாளி இல்லை. அவரது கைரேகையை வைத்து அவர் யார் என்று கண்டறிய முடியவில்லை. மேலும் கேமராவில் பதிவான அவரது படத்தை வைத்தும், அவர் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது படத்தை காட்டி அவர் யார் என்று தெரிகிறதா என்று கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகன் மற்றும் மருமகளிடம் கேட்டால் அவரை இதுவரை பார்த்ததே இல்லை என்றார்கள். மீண்டும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தோம். நீலகலர் சட்டைக்காரன் கொலையை முடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியில் வந்து, சற்று தூரம் நடந்து, பின்னர் ஒரு ஆட்டோவில் ஏறிச்செல்கிறான். அந்த ஆட்டோ நம்பரை குறித்துக்கொண்டு, அந்த ஆட்டோ டிரைவரை பிடித்தும் விசாரித்தோம். மேலும் நீலகலர் சட்டைக்காரனின் கேமரா பதிவு படத்தை கே.கே.நகர் பாரதிதாசன் காலனி பகுதி ஆட்டோக்காரர்களிடம் காட்டி விசாரித்தோம். அப்போதுதான் கொலையாளி யார் என்றும் அவரது வீட்டையும் கண்டுபிடித்தோம்.

கொலையாளியின் பெயர் சக்திவேல் (வயது 45) என்று தெரியவந்தது. சக்திவேல், கொலையை செய்து விட்டு, தனது செல்போனை பயன்படுத்தாமல் ஆப் செய்து வீட்டில் போட்டு விட்டார். அவர் வீட்டில் இருக்கிறாரா என்பதை முதலில் நைசாக விசாரித்தோம். அவர் முதலில் வீட்டில் இல்லை. பின்னர் அவர் வீட்டுக்கு வரும் வரை காத்திருந்து மடக்கிப்பிடித்தோம். நாங்கள் தீர்மானித்தபடி, சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் கொலையாளி சக்திவேல் கைது செய்யப்பட்டார்.

அவர் வாடகை வீட்டில் வசித்தார். வீட்டு உரிமையாளருக்கு ரூ.70 ஆயிரம் வாடகை பாக்கி இருந்தது. மேலும் அவரது மாமியாரிடம் வாங்கிய கடன் ரூ.25 ஆயிரம் போன்ற கடனை அடைப்பதற்காக ஈவு இரக்கம் இல்லாமல் ஒரு பெண்ணை கொலை செய்து, கொள்ளையடித்துள்ளார். கொள்ளையடித்த ரூ.2 லட்சம் பணத்தின் மூலம் வீட்டு உரிமையாளருக்கு கொடுக்க வேண்டிய கடன் உள்ளிட்ட கடன்களை அடைத்துள்ளார். கொள்ளையடித்த 45 பவுன் நகையை தியாகராயநகரில் அடமானம் வைத்துள்ளார். அந்த நகையை அப்படியே மீட்டோம். கொள்ளையடித்த பணத்தில் ரூ.1 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. கொலையாளி சக்திவேலிடம் விசாரித்தபோது அவர் ஏற்கனவே இதுபோல இன்னொரு பெண்ணையும் கொலை செய்து நகையை கொள்ளையடித்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந்தேதி கொலையாளி சக்திவேல் வசித்த கே.கே.நகர் பாரதிதாசன் காலனியில் சீதாலட்சுமி (வயது 79) என்ற பெண் இதேபோல் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். அவரும் வீட்டில் தனியாக இருந்தார். அவரது மகள் புவனேஷ்வரி துபாயில் உள்ளார். மகன் சிவகுமார் அடையாறில் குடும்பத்துடன் வாழ்கிறார். சீதாலட்சுமியின் தனிமையை பயன்படுத்தி கொலை செய்யப்பட்டார். அவரும் உடலில் காயம் இல்லாமல் கொலை செய்யப்பட்டிருந்தார். வாயை, மூக்கை பொத்தி மூச்சு திணற வைத்து இரண்டு பெண்களையும், சக்திவேல் தீர்த்துக்கட்டி இருக்கிறார். சீதாலட்சுமி வீட்டில் 19 பவுன் நகைகளை கொள்ளையடித்துள்ளார். அதிலும் 15 பவுன் நகைகளை மீட்டு விட்டோம்.

சீதாலட்சுமி கொலை வழக்கில் போலீசிடம் சிக்காமல் தப்பியதால், அடுத்து சிவகாமிசுந்தரியையும் கொலை செய்ய சக்திவேல் துணிந்து விட்டார். சக்திவேல் ஒரு சைக்கோ மனம் படைத்தவர். வயதான பெண்களை கொலை செய்து, கொள்ளையடிக்க வேண்டும் என்று முதலிலேயே திட்டமிட்டு செயல்பட்டுள்ளார். கேமராவில் அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தில் முககவசம், குடையால் முகத்தை மறைத்தபடி செயல்பட்டுள்ளார். கொள்ளை மட்டும் அடித்தால், பாதிக்கப்பட்டவர்கள் தன்னை அடையாளம் காட்டி விடுவார்கள் என்பதற்காக கொடூரமாக கொலை செய்துள்ளார்.

சக்திவேலை போன்ற கொடூர மனம் படைத்தவர்கள் கண்டிப்பாக சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும். அவர் மீது விரைவில் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அவருக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும். அவர் வேறு ஏதாவது இதுபோல் கொலை குற்றத்தில் ஈடுபட்டுள்ளாரா என்று விசாரணை நடத்தப்படும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கில் துப்பு துலக்கிய தனிப்படை பிரிவை சேர்ந்த உதவி கமிஷனர் பிராங்க்ளின் ரூபன், இன்ஸ்பெக்டர் அம்மு உள்ளிட்ட தனிப்படை போலீசாருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் பரிசு வழங்கி பாராட்டினார். மீட்கப்பட்ட நகைகள் மற்றும் ரொக்கப்பணம் கமிஷனர் அலுவலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. கூடுதல் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா அவற்றை பார்வையிட்டார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ருக்மாங்கதன் வ.
வட சென்னை.

Comments