சாத்தான்குளத்தில் தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.9 ஆயிரம் பணம் பறிப்பு!!
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் சந்தை அருகில் உள்ள தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் பணிக்கு சென்றிருந்தார். வீட்டில் அவரது மனைவி முத்து ஜோதி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது காவி உடைந்து அணிந்து வந்த 3 பேர்கள் ராமலிங்கம் மனைவியிடம், உங்கள் வீட்டில் தோஷம் உள்ளது.
அதனால் 7 பண்டாரங்களை வரவழைத்து அவர்கள் மூலம் தோஷம் கழித்தால் உங்களுக்கும் வீட்டுக்கும் நல்லது நடக்கும். குடும்பத்துக்கான ஆபத்து விலகிவிடும் என்று கூறியதுடன் 7 பண்டாரங்களும் தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.21 ஆயிரம் செலவாகும் என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் அவரது மனைவி தோஷம் கழிக்க மறுக்கவே, உடனடியாக தோஷம் கழிக்காவிட்டால் பெரிய ஆபத்து ஏற்படும் என்று அச்சுறுத்தி உள்ளனர். இதையடுத்து 3 பண்டாரங்களை வரவழைத்து தோஷம் கழித்தால் போதும் என்று ரூ.9 ஆயிரத்தை, மர்ம நபர்களிடம் ராமலிங்கம் மனைவி வழங்கியுள்ளார்.
பணத்தை பெற்றுக்கொண்ட மர்ம நபர்கள், அருகில் உள்ள கடைக்கு சென்றுஉடனடியாக வந்துவிடுவோம். உங்கள் கணவர் வீட்டிற்கு வந்தவுடன்தோஷம் பரிகாரத்தை ஆரம்பித்து விடுவதாக வெளியில் சென்றனர்.
இதுகுறித்து கணவரிடம் அவர் போனில் தகவல் தெரிவிக்கவே ராமலிங்கமும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். ஆனால் பரிகாரம் செய்வதாக பணத்தை வாங்கிச்சென்ற 3 பேரும் திரும்பி வரவே இல்லை. இதனையடுத்து ராமலிங்கம், சாத்தான்குளம் வர்த்தக சங்கம் சார்பில் பஜாரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, தோஷம் கழிப்பதாக பணத்தை வாங்கிச்சென்ற 3 மர்ம நபர்கள், காவி உடையுடன் பைக்கில் தப்பி செல்வது தெரியவந்தது.
இதுதொடர்பாக ராமலிங்கம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.
Comments