ஓட்டப்பிடாரம் உப்பாற்று ஓடையில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார்!!

  -MMH 

தூத்துக்குடி குறிஞ்சிநகர் பகுதியில் மழைநீர் தேங்காமல் உப்பாற்று ஓடையில் தடையின்றி ஓடி கடலில் கலக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார். கலெக்டர் ஆய்வு ஓட்டப்பிடாரம் தாலுகா புதூர்பாண்டியாபுரம் உப்பாற்று ஓடையில் கடந்த 7-ந்தேதி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நேற்று காலையில் கலெக்டர் செந்தில்ராஜ் இந்த பணியை ஆய்வு செய்தார். 

பின்னர் அவர் கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீர் தேங்காமல் கடலில் கலக்கும் வகையில் உப்பாற்று ஓடை தூர்வாரும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது மழைபெய்தால் வடமேற்கு பகுதியான ரஹ்மத்நகர், ராம்பிரசாத்நகர், குறிஞ்சிநகர் பகுதிகளில் அதிகளவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. 

புதூர்பாண்டியாபுரம், சங்கரப்பேரி வெள்ளப்பட்டி பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் தண்ணீர்தான் இதற்கு காரணம்.  உப்பாற்று ஓடையில் செல்லும் தண்ணீர் புதூர்பாண்டியாபுரம், வெள்ளப்பட்டி வழியாக மாப்பிள்ளையூரணி சென்று கடலில் கலக்க வேண்டும். இந்த ஓடையில் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் மழைநீர் செல்ல வழியின்றி இப்பகுதியில் தேங்கி வருகிறது. இதை தொடர்ந்து அந்த ஓடையில் 4 கி. மீ. தூரத்துக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி தடையின்றி தண்ணீர் கடலில் கலக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 உரம் ஸ்பிக் நிறுவனத்திலிருந்து யூரியா உள்ளிட்ட உரங்களை தென்மாவட்டங்களில் எங்கெங்கு அனுப்ப வேண்டும் என்று வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கப்பல் மூலமாகவும் யூரியா உரம் வந்துள்ளது. கூட்டுறவு சங்கங்களில் உண்மையான விவசாயிகள் அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து உரங்களை பெற்றுக்கொள்ளலாம். கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும், தனியார் கடைகள் மூலமாகவும் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். கலந்து கொண்டவர்கள் அப்போது ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உலகநாதன், ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி, யூனியன் ஆணையாளர் வெங்கடாசலம், கூடுதல் ஆணையாளர் பாண்டியராஜன், பொதுப்பணித்துறை நீர்வடிநிலக் கோட்டம் உதவி பொறியாளர் ரத்னகுமார், புதூர்பாண்டியாபுரம் பஞ்சாயத்து தலைவர் மஞ்சுளா, துணைத்தலைவர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments