குற்றச் செயல்களை தடுக்க புதிய நடவடிக்கை! டிரோன் கேமரா மூலம் கண்காணிக்க முடிவு!!

  -MMH 

டிரோன் கேமரா எனப்படும் ஆளில்லா சிறிய வகை விமானங்கள் பயன்பாடு தற்போது அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது. அதேபோல காவல்துறை வட்டாரங்களிலும் இந்த ட்ரோன் கேமராக்களின் பயன்பாடு பங்களிக்கிறது.

இந்த நிலையில் கோவையில் தொடர் குற்ற சம்பவங்கள் நடைபெற்று வந்தது. அதுபோன்று இனி குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காகவும் கோவை மாநகரில் குற்ற சம்பவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாகவும் கோவை மாநகர காவல் ஆணையர் புதிய முயற்சியை மேற்கொண்டு உள்ளார்.

அதில் மாநகரப் பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு ஒரு தலைமை காவலர் என நியமித்து அவர்களுக்கு ட்ரோன் கேமராவை கையாள்வது குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது. அது டி.ஜி.ட்ரோன் கேமரா பயிற்சி மையம் சார்பாக நடத்தப்பட்டது.

இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த பயிற்சி முகாமை கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். காவல்துறையினரும் அதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பயிற்சி மேற்கொண்டனர்.

இது குறித்து ட்ரோன் கேமரா பைலட் ராஜசேகர் கூறுகையில், ட்ரோன் கேமராவில் உள்ள அப்ளிகேஷன்கள் மற்றும் புதிய வகையான நவீன ட்ரோன்களை கையாளும் விதம் குறித்து காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதனால் காவல்துறையினர் செல்ல முடியாத சில இடங்களுக்கும் இந்த தொழில்நுட்பம் வாயிலாக சென்று கண்காணிக்க முடியும் என தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சி.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments