செஸ் ஒலிம்பியாட் நாயகனான குதிரை சின்னம்! தம்பி பெயருக்கு அண்ணாவே காரணம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
சென்னை: தமிழகத்தின் மாபெரும் தலைவரான பேரறிஞர் அண்ணா, எல்லோரையும் தம்பி என்றுதான் அழைப்பார். அதனால் தான் செஸ் ஒலிம்பியாட் சின்னத்திற்கு தம்பி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக ஒரு சர்வதேச விளையாட்டு தொடர் நடத்தப்பட்டால், அதனை பிரபலபடுத்தும் வகையில் பிரத்யேகமான சின்னம் உருவாக்கப்படுவது வழக்கம். அந்த சின்னம் வாயிலாக மக்கள் மத்தியில் அந்த விளையாட்டு பிரபலப்படுத்தப்படும். அப்படி சென்னையில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சின்னம் தான் தம்பி.
செஸ் விளையாட்டில் வெல்ல முக்கிய காய்-ஆக இருக்கும் குதிரையை மையப்படுத்தி, அதற்கு தமிழர் கலாச்சாரமான வேட்டி, சட்டை அணிவித்து, வணக்கம் சொல்லுவது போல் பிரத்யேக சின்னமாக உருவாக்கப்பட்டது. அதேபோல் மக்கள் மத்தியில் அந்த சின்னத்தை எளிதில் கொண்டு செல்லும் வகையில் தம்பி என்று அந்த சின்னத்திற்கு பெயர் வைக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் தம்பி குதிரை சின்னத்தை பிரபலப்படுத்தும் வகையில் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் வைக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட்டது. விநாயகர் சிலையைப் போல் மனித உடலில் குதிரை தலையை பொறுத்தி அதற்கு வேட்டி சட்டை அணிந்தது மக்களை இன்னும் நெருக்கமாக உணர வைத்தது. அதேபோல் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் சுவர் விளம்பரமாக வரையப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. சர்வதேச செஸ் வீரர்கள் உட்பட அனைவரையும் செல்ஃபி எடுத்துக்கொள்ளத் தூண்டும் இந்த தம்பி குதிரை சிலை, சென்னை சாலிகிராமத்தில் உள்ள சிற்பங்களை வடிவமைக்கும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செஸ் ஒலிம்பியாட் சின்னத்துக்கு 'தம்பி' என பெயரிட்டிருக்கிறோம். சகோதரத்துவத்தின் அடையாளமாக பெயரை சூட்டியிருக்கிறோம். எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்பதே இதன் பொருள். அதுமட்டுமல்ல, தமிழகத்தின் மாபெரும் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள், எல்லோரையும் தம்பி என்றுதான் அழைப்பார் என்று விளக்கம் அளித்தார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தம்பி சின்னம் மூலமாக தமிழ் கலாச்சாரத்தை சர்வதேச அளவில் கொண்டு சென்றதோடு, தமிழ் பண்பாடான அனைவரும் ஒருதாய் மக்கள் என்று கூறி தமிழையும் அனைத்து மக்கள் மத்தியில் அரசு கொண்டு சென்றுள்ளது. தமிழக அரசின் செஸ் போட்டிகளுக்கான செயல்பாடுகள் இனி வருங்காலங்கள் இந்தியாவில் நடைபெறும் விழாவுக்கு ஒரு பெஞ்ச்மார்க்காக இருக்கப் போவது நிச்சயம்.
-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.
Comments