ஜோன் அடிப்படையில் தெருக்கள் பிரிக்கப்பட்டு சமச்சீராக சொத்து வரி விதிப்பு!!

    -MMH 

கோவை நகர் பகுதியில் புதிதாக கட்டப்படும் கட்டடங்களுக்கு சமச்சீராக சொத்து வரி விதிக்கும் வகையில், 'ஜோன்' அடிப்படையில் தெருக்கள் பிரிக்கப்பட்டு, கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.கோவை பழைய மாநகராட்சி பகுதியில் ஐந்து விதமாகவும், இணைக்கப்பட்ட, 11 உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட ஏரியாக்களில், 11 விதமாகவும், மொத்தம், 16 விதமாக சொத்து வரி விதிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக, ஒவ்வொரு பகுதிக்கும் சொத்து வரி நிர்ணயம் முரண்படுகிறது.

இதற்கு தீர்வு காண, பஸ்கள் செல்லும் ரோடு - 'ஏ' ஜோன், பிரதான ரோடு - 'பி', பிற தெருக்கள் - 'சி', அடிப்படை வசதிகள் அற்ற குடிசை பகுதி மற்றும் மிகவும் பின்தங்கிய பகுதிகள் - 'டி' ஜோன் என பிரிக்கப்பட்டு, தெருக்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளன.இதில், குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் சிறப்பு கட்டடங்கள் என, கட்டடங்கள் பிரிக்கப்பட்டு, சதுரடி கணக்கில் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. 

உதாரணத்துக்கு, 'ஏ' ஜோன் பட்டியலில் உள்ள தெருவில் இருக்கும் குடியிருப்புக்கு, அடிப்படை கட்டணமாக, சதுரடிக்கு, 2.50 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதனுடன், பொது பயன்பாட்டு வரி, கல்வி வரி மற்றும் நுாலக வரி சேர்க்கப்படும். இவ்வரியினங்களை சேர்ந்தால், ஒரு சதுரடிக்கு, 3.86 ரூபாய் செலுத்த வேண்டும். அதாவது, 1,000 சதுரடி கொண்ட குடியிருப்பாக இருப்பின், ஆறு மாதத்துக்கு ஒருமுறை, 3,860 ரூபாய் சொத்து வரி செலுத்த வேண்டும். 

இக்கணக்கீடு கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் போன்ற மற்ற கட்டடங்களுக்கு பல மடங்கு அதிகமாக இருக்கும்.இத்தகைய வரி சீராய்வு புதிதாக கட்டப்படும் மற்றும் கட்டியுள்ள கட்டடங்களுக்கு மட்டுமே பொருந்தும். பழைய கட்டடங்களுக்கு ஏற்கனவே உயர்த்தப்ட்ட சொத்து வரி அமலில் இருக்கும். இதுதொடர்பான தீர்மானம், மாநகராட்சியில் நேற்று நடந்த மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

மாநகராட்சி வருவாய் பிரிவினர் கூறுகையில், 'அனைத்து பகுதிக்கும் சமச்சீராக இருக்கும் வகையில் வரி சீராய்வு செய்யப்படுகிறது. புதிய கட்டடங்களுக்கும், பழைய கட்டடத்தில் புதிய கட்டுமானங்கள் செய்திருந்தால், சீராய்வு அடிப்படையில் வரி விதிக்கப்படும்' என்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-சுரேந்தர்.

Comments