சுதந்திர இந்தியாவில் மே மாதம் மேட்டூர் அணை திறப்பு: தமிழக அரசின் புதிய சாதனை... மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பாராட்டு!!
சுதந்திர இந்தியாவில் மே மாதம் மேட்டூர் அணை திறப்பு: தமிழக அரசின் புதிய சாதனை... தமிழக முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா பாராட்டு
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் எம். எச். ஜவாஹிருல்லா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
"காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணை 117 அடியாக உயர்ந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் நலன் கருதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை வழக்கமாக ஜூன் 12 ந்தேதிக்கு முன்பாகவே நடப்பாண்டில் மே 24 ஆம் தேதியன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களால் 19 நாள்களுக்கு முன்பாகவே திறக்கப்பட்டுள்ளது.
1947 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்று வரை மே மாதத்திலேயே மேட்டூர் அணை திறக்கப்படுவது இதுவே முதல் முறை என்கிற பெருமையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பதிவு செய்துள்ளது.முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் குறுவை மட்டுமின்றி சம்பா, தாளடி ஆகிய பருவங்களிலும் விவசாயிகள் தாராளமாக எந்தவித சிரமங்களுமின்றி சாகுபடி செய்யும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்புகளும் இருப்பதால் நெல் மட்டுமல்லாமல் பயறு,தானிய வகைகள் அதிக அளவில் சாகுபடி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
டெல்டா பகுதிகளில் நடைபெற்றுள்ள நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் காரணமாக காவிரியின் கடைமடை பகுதி வரை நீர் சென்றடைவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. விரைவாக சாகுபடி பணிகள் தொடங்கப்பட இருப்பதால் பருவமழை காலங்களில் விவசாய பயிர்கள் மழையில் பாதிக்கப்படுவது குறையும் என்கிற நம்பிக்கை உருவாகியுள்ளது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் இத்தகைய துரிதமான நடவடிக்கை காரணமாக டெல்டா மாவட்டங்களில் உள்ள 5 லட்சத்து 21 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுவதன் மூலம், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மே மாதத்தில் மேட்டூர் அணையை திறந்து வரலாற்று சாதனை படைத்துள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்."
-ருசி மைதீன்.
Comments