மூலப்பொருள் கிடைப்பதில் தாமதம் மற்றும் விலையேற்றத்தால் தடுமாறும் பஞ்சாலை தொழில்!!
கோவை மாவட்டத்தில் சூலுாருக்கு அடுத்து அன்னுார் தாலுகாவில்தான் அதிக அளவாக, 125 நுாற்பாலைகள் உள்ளன. குறைந்தபட்சம் 3,000 ஸ்பிண்டில் திறன் முதல் அதிகபட்சம் 50 ஆயிரம் ஸ்பிண்டில் திறன் வரை உள்ள சிறு, குறு மற்றும் பெரிய நுாற்பாலைகள் உள்ளன.கரியாம்பாளையம், கணேசபுரம், குன்னத்துார், கோவில்பாளையம், பசூர், கஞ்சப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ளன இந்த நுாற்பாலைகளில் உள்ளூர் தொழிலாளர் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த பல ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா பகுதிகளில் இருந்து பருத்தி மற்றும் பஞ்சு கொள்முதல் செய்து 40 மற்றும் 60-ம் எண் நுால் இங்கு தயாரித்து வருகின்றனர்.வழக்கமாக நுாற்பாலைகளில், தொழிலாளர்கள் கிடைக்காததால் தொழிலாளர்களை அழைத்து வந்து வேலைக்கு சேர்த்து விட்டால், அந்தத் தொழிலாளி தொடர்ந்து மூன்று மாதங்கள் வேலையில் இருந்து விட்டால், அழைத்து வந்து சேர்த்தவருக்கு கணிசமான கமிஷன் தருகின்றனர்.
இது குறித்து சிறு நுாற்பாலை உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:தற்போது 356 கிலோ எடை கொண்ட ஒரு கண்டி பஞ்சு, ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. பஞ்சு விலை 60 சதவீதம் 5 மாதத்தில் உயர்ந்து உள்ளது. நுால் விலை 20 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. 40ம் எண் நுால் 50 கிலோ கொண்ட மூட்டை 17 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. 60ம் எண் நுால் 50 கிலோ மூட்டை 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ நுால் உற்பத்தியில் 40 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, அன்னுார் தாலுகாவில் பெரும்பாலான மில்கள் பகல் ஷிப்ட் மட்டுமே இயங்குகின்றன. சில மில்கள் மட்டும் பகல் மற்றும் ஆப் நைட் சிப்ட் இயங்குகிறது. எந்த மில்லும் மூன்று சிப்ட் இயக்குவதில்லை.
ஜின்னிங் பேக்டரிநுாற்பாலைகள் ஷிப்ட் குறைப்பால், ஜின்னிங் பேக்டரிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அன்னுார் தாலுகாவில் பல நுாறு தொழிலாளர்கள் தற்போது வேலை இழந்து உள்ளனர்.பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் ஜவுளித் தொழில் நலிவடையாமல் மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும். உடனடியாக பஞ்சு தடையில்லாமல் நியாயமான விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிச்சந்தையில் அரசே பஞ்சு கொள்முதல் செய்து கட்டுப்படியாகும் விலைக்கு நுாற்பாலைகளுக்கு வழங்க வேண்டும். பஞ்சு இறக்குமதிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அதிக அளவில் பருத்தி பயிர் விளைவிக்க விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.நுாற்பாலைகள் தற்போதைய சிரமமான நிலை மாறும் வரை வங்கி கடன் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய மாநில அரசுகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டால் மட்டுமே நுாற்பாலைகளில் அழிவிலிருந்து மீட்க முடியும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.
Comments