பராமரிக்கப்படாத விடுதிக் கட்டிடங்களால் அச்சம்! ஆதிதிராவிடர் விடுதி கட்டிடங்களை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை!

    -MMH 

     அன்னுார் சொக்கம் பாளையத்தில் ஆதிதிராவிடர் விடுதி கட்டடங்கள் மோசமான நிலையில் உள்ளன.அன்னூர் அருகே மகாத்மா காந்தி வருகை புரிந்த கிராமம் சொக்கம்பாளையம். இங்கு ஆதிதிராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட மாணவியருக்கு என மூன்று விடுதிகள் உள்ளன. ஆதிதிராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு என இரண்டு விடுதிகள் உள்ளன. மொத்தம் ஐந்து விடுதிகள் இங்கு உள்ளன.

இதில் நான்காம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியர் இலவசமாக தங்கி படிக்க வசதி உள்ளது. சில ஆண்டுகளாக விடுதிக் கட்டடங்கள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் பக்கவாட்டு சுவர்களில் சிமென்ட் காரைகள் உதிர்ந்து விழுந்து செங்கற்கள் தெரிகின்றன. மேலும் ஜன்னலுக்கு மேலே உள்ள கான்கிரீட் ஸ்லாப் அடிக்கடி உதிர்ந்து விழுகின்றன. உள்ளே இருக்கும் கம்பி தெரிகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி என பல மாவட்டங்களில் இருந்து ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாணவியர் இங்கு தங்கி படிக்கின்றனர். மாணவியருக்கு, மூன்று வேளையும் சுவையான உணவு வழங்கப்படுகிறது. எனினும் கட்டிடம் மோசமாக உள்ளதால் மாணவியர் அச்சத்தில் உள்ளனர். அரசு இங்கு உள்ள விடுதிகளின் கட்டடங்களில் முழுமையாக பராமரிப்பு பணி செய்ய வேண்டும்.

விடுதி வளாகத்தை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டடங்கள் பராமரிப்பில்லாமல் மோசமாக உள்ளதாலும் விடுதி வளாகம் தூய்மை இல்லாமல் இருப்பதாலும் விடுதியில் சேர மாணவ மாணவியர் பலர் தயங்குகின்றனர்இதனால் இங்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை விட குறைவான அளவு மாணவ, மாணவியரே தங்கி படித்து வருகின்றனர். விடுதி கட்டடத்தில் பராமரிப்பு பணி செய்யப்பட்டு வளாகம் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு இங்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவுக்கு மாணவ மாணவியர் சேர்ந்து தங்கி படிக்க முன்வருவர், என, சொக்கம்பாளையம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

- சி.ராஜேந்திரன்.

Comments