நூலகத்துக்கு இடமிருக்கு, புது கட்டடம் இல்லை! வாக்குறுதியை மறந்த மக்கள் பிரதிநிதிகள்!!

    -MMH 

ஆனைமலை அடுத்துள்ள அங்கலக்குறிச்சியில் கிளை நுாலகத்தின் கட்டடம் சிதிலமடைந்து மழைக்கு புத்தகங்கள் வீணாகின்றன. புதிய கட்டடம் கட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனைமலை, அங்கலக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட, தபால்நிலையம் அருகே, 1989ல் பகுதி நேர நுாலகம் அமைக்கப்பட்டது. ஊராட்சி வழங்கிய இலவச இடத்தில் துவங்கப்பட்ட இந்த நுாலகம் சிறப்பாக செயல்பட்டதால், 2011ல் ஊர்ப்புற நுாலகமாகவும், 2012ல் கிளை நுாலகமாக தரம் உயர்த்தப்பட்டது.

தற்போது, 13 ஆயிரம் புத்தகத்துடன், 300 சதுர அடிக்கும் குறைவான இடத்தில் செயல்படுகிறது. நாள்தோறும், 40க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள், முதியவர்கள் இந்த நுாலகத்தை பயன்படுத்துகின்றனர்.இட நெருக்கடியால் நுாலகத்தில் அதிகபட்சமாக, நான்கு பேர் வரையில் மட்டுமே அமரும் அவல நிலை நீடிக்கிறது. மேலும், சிமென்ட் சீட் அமைக்கப்பட்ட நுாலக கட்டடம் மற்றும் மேற்கூரை சிதிலமடைந்து, மழைநீர் கசிந்து புத்தகங்கள் வீணாகின்றன. மேலும், கட்டடம் மிகவும் ஆபத்தான நிலையிலுள்ளது.

 நுாலகத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக, அங்கலக்குறிச்சி ஊராட்சி அலுவலகத்துக்கு அருகே, 15 சென்ட் இடம், 15 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கப்பட்டது. ஆனால், இன்று வரை புதிய கட்டடம் கட்டப்படவில்லை. மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் கட்டடம் கட்டுவதற்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை.2011 முதல் இன்று வரையுள்ள, எம்.எல்.ஏ., எம்.பி.,யிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்படுகிறது. 'தொகுதி நிதியில் கட்டித்தருகிறோம்,' எனக்கூறிய மக்கள் பிரதிநிதிகள், அலட்சியமாக உள்ளனர்.

நுாலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட, நுாலகத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே மக்களின் கோரிக்கையாகும். இளைஞர்கள் கூறியதாவது:அங்கலக்குறிச்சி ஊராட்சி அலுவலகம் அருகே, ஊராட்சியின் கிராமப்புற நுாலகத்துக்கு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த நுாலக கட்டடம் இன்னமும் திறக்கப்படவில்லை.

கிளைநுாலகத்தில் அமர்ந்து படிக்க முடியாத நிலை உள்ளது. புத்தகம் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது.நுாலகத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய நுாலகம் கட்ட வேண்டும்; அதிக நுால்கள் வழங்க வேண்டும். மேலும், ஊராட் சியில், பல லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட, கழிப்பிடம், சமுதாய நலக்கூடம் என பல கட்டடங்கள் காட்சிப்பொருளாக உள்ளன.இவ்வாறு, தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments