சிறப்பு லேடீஸ் டாய்லெட்" புதிய மேயரிடம் எதிர்பார்க்கும் பெண்கள்! அவசரத்திற்கு"உதவ வேண்டுகோள்!!
மாநகராட்சிக்கு முதல் பெண் மேயர் கிடைத்துள்ள நிலையில், பொது இடங்களில் 'டாய்லெட்' வசதி, எரியாத தெரு விளக்குகளால் அச்சுறுத்தல் போன்ற பெண்களின் பிரச்னைகளுக்கு விடிவு வந்து விட்டதாகவே, கோவை பெண்கள் நம்பிக்கையுடன் கொண்டாடுகின்றனர்.
இந்த நம்பிக்கை பொய்த்து விடாமல் இருக்க, நகரம் முழுவதும் ஆங்காங்கே பெண்களுக்கு தனி கழிவறைகள் கட்டப்பட வேண்டும்.கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக கல்பனா பதவியேற்றுள்ளார். மாநகராட்சியின், 100 கவுன்சிலர்களில், 55 பேர் பெண்கள். அதே போல் மாநகராட்சி பகுதிகளில், 7 லட்சத்து, 83 ஆயிரத்து, 56 பெண் வாக்காளர்கள் என, ஆண்களை விட பெண்களின் ராஜ்ஜியமே இருக்கிறது.
ஐந்தாண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடந்துள்ளதால், பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் நம்பிக்கையில், கோவை மக்கள் உள்ளனர். குறிப்பாக, பெண்கள் சார்ந்த பிரச்னைகளுக்கு, பெண் மேயரால் விமோசனம் கிடைக்கும் என்ற நம்பிக்கை வலுத்துள்ளது.அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர் உள்ளிட்ட தேவைகள் ஒருபுறம் இருக்க, பொது இடங்களில் 'டாய்லெட்' வசதி இல்லாததுதான், பெண்களின் முக்கிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது.
மாநகராட்சி சார்பில், பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில், பொதுக்கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. சில இடங்களில் வைக்கப்பட்டிருந்த, பச்சை நிற 'மொபைல் டாய்லெட்'களை தற்போது காணவில்லை.கோவையில் ஆறு ஆண்டுகளுக்கு முன், 20க்கும் மேற்பட்ட இடங்களில், 3.98 கோடி ரூபாய் செலவில் 'நம்ம டாய்லெட்' அமைக்க திட்டமிடப்பட்டது.
அவிநாசி ரோடு, சிங்காநல்லுார் கக்கன் நகர் உள்ளிட்ட இடங்களில், இந்த டாய்லெட் வசதி உள்ளது.இவற்றில் பல மோசமான நிலையில் பராமரிப்பின்றி உள்ளன. குறிப்பாக, பொது இடங்களில் மொபைல் டாய்லெட் வசதி இல்லாததால், பெண்கள், வயதானவர்கள் வெளியூர்களில் இருந்து வருவோரும், உள்ளூர்வாசிகளும் பொது இடங்களுக்கு செல்லும்போது, அவசரத்துக்கு டாய்லெட் வசதி கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.
இதேபோன்று, பெண்களுக்கான பல பிரச்னைகளையும், தேவைகளையும் அடுக்கிக்கொண்டே போகலாம். இதற்கு, புதிதாக பதவியேற்றுள்ள பெண் மேயர் விரைவில் தீர்வு காண்பார் என்பது பெண்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
'நிச்சயம் நிறைவேற்றுவேன்!'மாநகராட்சி மேயர் கல்பனாவிடம் கேட்டபோது, ''தற்போதுதான் மேயராக பதவியேற்றுள்ளேன். பெண்களுக்குரிய பிரச்னைகளையும், தேவைகளையும் அறிந்து நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன். பெண்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்,'' என்றார்.
இன்று சர்வதேச மகளிர் தினம்!
இப்ப இல்லைன்னா... எப்ப?கவுன்சிலர்களில் பாதிப்பேர் பெண்கள்; தலைமையும் ஒரு பெண். இப்படி ஒரு மன்றத்தில் நிறைவேற்ற முடியாத பெண்களின் பிரச்னைகளை, வேறு எந்த காலத்திலும் நிறைவேற்ற முடியாது. பெண்கள் நலனில் மிகுந்த அக்கறை கொள்ள போவதாக, முதல்வர் ஸ்டாலினும் நேற்று அறிவித்துள்ள நிலையில், நகரம் முழுவதும் பெண்களுக்கென நவீன வசதிகளுடன் கழிவறைகள் கட்டப்பட வேண்டும். சிறு கட்டணம் நிர்ணயித்தாலும், தொடர்ந்து சிறப்பாக, துாய்மையாக அவை செயல்படுவதை மேயர் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.
Comments