மாணவனுடன் ஊர் ஊராக சுற்றிய ஆசிரியை - சிக்னல் வைத்து பிடித்த போலீசார்!!

   -MMH 

   பதினேழு வயது பள்ளி மாணவனை திருமணம் செய்த ஆசிரியை போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  செல்போன் ஐஎம்ஈஐ எண்ணைக்கொண்டு அதுகாட்டிய சிக்னலை வைத்து பிடித்துள்ளனர் போலீசார்.

துறையூர் அடுத்த கொட்டையூர் செல்லும் சாலையில் உள்ள அந்த தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த 17வயது  மாணவர் கடந்த ஐந்தாம் தேதி அன்று பள்ளி முடிந்ததும் மாலையில் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.  அதன்பின்னர் வீட்டில் உள்ள பெற்றோரிடம் விளையாட செல்கிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே சென்றிருக்கிறார். அதன் பின்னர் அந்த மாணவர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், மாணவனை காணவில்லை என்று அவரின் தாயார் கடந்த 11-ஆம் தேதியன்று துறையூர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவன் குறித்து விசாரணை நடத்திய போது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் எம்ஏ பிஎட் எம்பில் முடித்துவிட்டு அந்த மாணவன் படிக்கும் அதே பள்ளியில் சித்தாம்பூரைச் சேர்ந்த வையாபுரி திலகவதி என்பவரின் இருபத்தி ஆறு வயது மகள் சர்மிளா மாணவன் காணாமல் போன அதே தேதியில் மாயமானது தெரியவந்தது.  கடந்த ஆறு ஆண்டுகளாக அந்த பள்ளியில் வேலை செய்து வந்திருக்கிறார். 

காணாமல் போன மாணவன் ஏழாம் வகுப்பு படிக்கும்போது அந்த மாணவனுக்கு சர்மிளா பாடம் நடத்தியிருக்கிறார். இதை அடுத்து போலீசாருக்கு அந்த ஆசிரியை சர்மிளா மீது சந்தேகம் வந்து அவரின் செல்போன் ஐஎம்ஈஐ எண்ணை தொடர்பு கொண்டு போலீசார் ஆய்வு செய்து வந்தனர். அப்போது வேளாங்கண்ணி, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி ஆகிய இடங்களில் மாறி மாறி சிக்னல் காட்டியிருக்கிறது. கடைசியாக திருச்சி எடமலைப்பட்டி புதூரில் ஆசிரியையின் தோழி வீட்டில் சிக்னல் காட்டி இருக்கிறது. இதையடுத்து அந்த  இடத்திற்கு சென்ற போலீஸ் விசாரணை நடத்தியதில், தோழி வீட்டில்தான்  ஆசிரியை மாணவன் இருவரும் இருந்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் தஞ்சாவூர் கோயிலில் தாலி கட்டிக்கொண்டு  இருவரும் திருமணம் செய்தது தெரிய வந்திருக்கிறது.  இதையடுத்து போலீசார் மாணவனையும் ஆசிரியை சர்மிளாவையும் துறையூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதன் பின்னர் முசிறி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் காவேரி,  ஆசிரியை சர்மிளாவிடம் விசாரணை நடத்தி இருக்கிறார். துறையூர் காவல் நிலையத்தில் வைத்து இருவரிடமும் விசாரணை நடத்தி முடித்ததும் 17 வயது மாணவனை ஆசை வார்த்தை சொல்லி அழைத்துச் சென்று திருமணம் செய்த ஆசிரியை சர்மிளாவை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். அந்த மாணவனை காப்பகத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள் போலீசார்.

-துல்கர்னி உடுமலை.

Comments