கோவையில் பாரம்பரிய இட்லி திருவிழா...! 100 விதமான இட்லிகளை தயாரித்து கொண்டாடிய மாணவர்கள்...!
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் உலக இட்லி தினத்தை முன்னிட்டு பாரம்பரிய இட்லி திருவிழா நடைபெற்றது.
இட்லி என்பது பாரம்பரியமாக தமிழர் வாழ்வின் முக்கிய உணவாக உள்ளது. அதை மீண்டும் நமது உணவின் முக்கிய அம்சமாக கொண்டு செல்ல இட்லி தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தையொட்டி பாரம்பரிய இட்லி திருவிழாவைக் கொண்டாடும் வகையில் கோவையில் கேட்டரிங் மாணவர்கள் தற்போது புதுப்புது வடிவங்களில் ,வண்ணங்களில், சுவைகளில் என 100 வகையான இட்லியை தயாரித்து அசத்தியுள்ளனர்.
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கேட்டரிங் மாணவர்கள் வகை வகையான 100 இட்லியை தயார் செய்து சக மாணவர்களின் பார்வைக்காக காட்சி படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் இந்த இட்லி கண்காட்சியை கண்ட மாணவர்கள் இட்லியின் வடிவங்களையும் வண்ணங்களையும் பார்த்து அசந்தனர்.
மேலும் இந்த கண்காட்சியில் கம்பு இட்லி, தயிர் இட்லி ,ரொட்டி இட்லி ,ஆப்பிள் இட்லி ,மல்லி இட்லி, சிக்கன் இட்லி, முட்டை இட்லி,குல்பி இட்லி, கேக் இட்லி மற்றும் ஆரோக்கியமான வீடு என்ற தலைப்பில் வீடு வடிவத்தில் உருவாக்கப்பட்ட இட்லி என 100 வகையான இட்லிகள் இடம்பெற்றிருந்தன. அதேபோல இட்லியை தொட்டு உண்ண தேங்காய் சட்னி, வேர்க்கடலை சட்னி, வெங்காய சட்னி, பூண்டு சட்னி, மாங்காய் சட்னி, தயிர் சட்னி , பேரீச்சை சட்னி உள்ளிட்ட பலவகையான சட்னிகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
- சீனி,போத்தனூர்.
Comments