அ.தி.மு க கோட்டையில் பெரும் ஓட்டை..!!

   -MMH 

   பொள்ளாச்சி நகரில், ஓட்டு சதவீதம் குறைந்து வருகிறது. இதற்கான காரணத்தை அறிந்து சரி செய்தால், அடுத்த தேர்தல்களில் வெற்றிக்கனியை பறிக்க முடியும், என, அ.தி.மு.க.,வினர் கட்சி தலைமைக்கு வலியுறுத்தியுள்ளனர்.

பொள்ளாச்சி பகுதியில் கடந்த, 1977ம் ஆண்டு முதல் அ.தி.மு.க., வை சேர்ந்தவர்களே எம்.எல்.ஏ.,க்களாக இருந்துள்ளனர். இதில், கடந்த, 1996ம் ஆண்டு தேர்தல் தவிர தொடர்ந்து அ.தி.மு.க.,வின், 'கோட்டையாக' இப்பகுதி உள்ளது. மக்களுடன் தொடர்பிலே இருப்பதால், வெற்றியை அ.தி.மு.க.,வினர் தக்க வைத்துள்ளனர். பொள்ளாச்சி எம்.பி., தேர்தலில், தி.மு.க.,விடம் வெற்றியை பறிகொடுத்த நிலையில், அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கி சரிய துவங்கி விட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

கடந்தாண்டு எம்.எல்.ஏ., தேர்தலில் கிராமப்புறங்களில் அ.தி.மு.க., அதிக ஓட்டு பெற்று முன்னிலை பெற்றாலும், நகர ஓட்டுகள் எண்ணும் போது நிலைமை தலைகீழாக மாறியது.

தி.மு.க., வேட்பாளருக்கு அதிக ஓட்டுகள் சென்றதால், கடும் போட்டியாக மாறி, கட்சியில் குறைந்தபட்ச ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது.அப்போதே நகராட்சி பகுதியில் ஓட்டு சதவீதம் குறைய காரணம் குறித்து கட்சியினர் ஆலோசிக்க தவறியதாக கூறப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பொள்ளாச்சி நகராட்சியில், ஆறு வார்டுகளில், அ.தி.மு.க., வேட்பாளர்கள் 'டிபாசிட்' இழந்துள்ளனர். குறிப்பாக, 7, 15, 28 ஆகிய வார்டுகளில், மூன்றவாது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.உறுதியாக வெற்றி பெறுவார்கள் என கருதப்பட்டவர்களும் தோல்வியை தழுவியுள்ளனர்.

 நகராட்சியில், அ.தி.மு.க., மொத்தமுள்ள, 36 வார்டுகளிலும் போட்டியிட்டு, 16,001 ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளது. இந்த நிலைக்கு தள்ளப்பட்டதற்கு உண்மையான காரணம் குறித்து கட்சி ஆலோசிக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதாக, கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.

மற்ற தேர்தல்களை விட, இந்த தேர்தல், 'காஸ்ட்லி' தேர்தல் என கூறினாலும் அ.தி.மு.க.,வுக்கான ஓட்டுக்கள் ஏன் விழவில்லை என கேள்வி எழுந்துள்ளது. அ.தி.மு.க.,வுக்காக விழுந்த ஓட்டுகள் மாற காரணம், வேட்பாளர்களை விட சின்னத்தை பார்த்து விழுந்த ஓட்டுகள் மாயமாகியது, அ.தி.மு.க., அடிமட்ட தொண்டர்கள் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும்.

கட்சிக்குள் சுயபரிசோதனை செய்ய வேண்டியது அவசியமாகும். இந்த பரிசோதனையே, வரும் தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க முடியும். அதற்காக, கட்சி தலைமை இப்போதே திட்டம் வகுக்க வேண்டும், என, கட்சியினர் தலைமைக்கு வலியுறுத்தியுள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V.ஹரிகிருஷ்ணன்,

பொள்ளாச்சி.

Comments