உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு! காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்!!

    -MMH 

கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி டாக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையில் 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் ரெயில் நிலையம், திருச்சிரோடு, அவினாசி ரோடு, மேட்டுப் பாளையம் ரோடு, சத்தியமங்கலம் சாலை, காந்திபுரம், சிங்காநல்லூர், பீளமேடு, கணபதி, ஆர்.எஸ்.புரம் உள்பட பல இடங்களில் உள்ள ஓட்டல்கள், பேக்கரிகள், மளிகை கடைகள், பெட்டிக்கடைகள் என மொத்தம் 353 கடைகளில் ஆய்வு செய்தனர்.

இதில், 64 கடைகளில் இருந்து ரூ.61 ஆயிரத்து 995 மதிப்பில் 1,672 லிட்டர் காலாவதியான குளிர்பானங்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து உடனடியாக அவற்றை அழித்தனர். மேலும் 42 கடைகளில் இருந்து ரூ.86 ஆயிரத்து 830 மதிப்பிலான 312 கிலோ காலாவதியான உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர். 

அந்த வகையில் மொத்தம் ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 825 மதிப்பி லான காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இது தொடர்பாக 79 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. 

ஆய்வின்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் உபயோகத்தில் இருந்ததை கண்டறிந்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைகளுக்கு ரூ.77 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பதை தடுக்க தொடர்ந்து சோதனை நடத்தப்படும் என்று கலெக்டர் சமீரன் தெரிவித்து உள்ளார்

நாளைய வரலாறு செய்திக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments