பிரசித்தி பெற்ற கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் வருகிற 2-ந் தேதி நடக்கிறது!!

   -MMH 

    கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் டவுன்ஹால் பகுதியில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி பிற மாவட்ட பக்தர்களும் வருகை வந்து அம்மனை வழிபட்டுவிட்டு செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். 

அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் கடந்த 22-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் புலி வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்னவாகனம் என நாள்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

கடந்த 25-ந் தேதி திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். திருவிழாவை முன்னிட்டு கோனியம்மன் கோவிலில் அக்னி கம்பம் நடப்பட்டு உள்ளது. நேற்றும், நேற்று முன்தினமும் விடுமுறை என்பதால் கோனியம்மனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். 

இதையடுத்து சாமி தரிசனம் செய்வதற்கும், அக்னி கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றவும் தனித்தனி வரிசைகள் ஏற்படுத்தப்பட்டது. ஏராளமான பெண் பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து அக்னி கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி வழிபட்டனர்.

இதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை  நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.அன்று மாலை அம்மன் பூதவாகனத்தில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

இதையடுத்து புதன்கிழமை புகழ்பெற்ற கோனியம்மன் கோவில் தேரோட்டம் நடக்கிறது. இதில் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து செல்கின்றனர். 

ராஜவீதியில் உள்ள தேர் முட்டியில் தொடங்கி ஒப்பணக்கார வீதி, கருப்பகவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர் முட்டியை அடைகிறது. இதற்காக கோவை ராஜவீதியில் உள்ள தேர் முட்டியில் கோனியம்மன் தேரை அலங்காரம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 

தொடர்ந்து வருகிற 3-ந் தேதி குதிரை வாகனத்தில் பரிவேட்டை நிகழ்ச்சியும், 4-ந் தேதி தெப்பத்திருவிழாவும், 5-ந் தேதி கொடியிறக்கமும், 7-ந் தேதி வசந்தவிழாவுடன் கோவில் திருவிழா நிறைவடைகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments