ஒன்றிய அரசின் காழ்ப்புணர்ச்சிக்கு காவு தரப்படுகின்றதா மக்கள் கண்காணிப்பகம்!
வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மதுரையில் உள்ள மக்கள் கண்காணிப்பகத்தின் (People's Watch) மீது எட்டு பிரிவுகளின் கீழ் ஒன்றிய அரசின் நடுவண் புலனாய்வுச் செயலகம் (CBI) வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற வேண்டுமெனில், அவை மத்திய அரசின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி, அதற்கான உரிமத்தைப் பெற வேண்டும். விதிமுறைகளைப் பின்பற்றவில்லை எனக்கூறி 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களின் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கான அனுமதியை ஒன்றிய அரசு மறுத்துள்ளது.
தற்போது உள்ள அரசு விதிகளின்படி சமூக, கல்வி, மத, பொருளாதார மற்றும் கலாசார நோக்கங்களுக்காக அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறலாம். இந்த நிறுவனங்கள் அனைத்தும் கட்டாயம் வருமான வரி சட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சட்டம் வழிகாட்டுகின்றது.
இந்நிலையில், CPSC அறக்கட்டளையின் கீழ் மக்கள் கண்காணிப்பகம் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இந்தத் தொண்டு நிறுவனம் குழந்தைகள், முதியவர்கள், எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆகியோருக்கு உதவிகளைச் செய்து வருகின்றது. கடந்த 1985ஆம் ஆண்டு முதல் இந்தத் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக வழக்கறிஞர் ஹென்றி திபேன் செயலாற்றி வருகின்றார். இந்நிறுவனம் நன்கொடைகளைக் கொண்டு பல்வேறு காப்பகங்களையும் நடத்தி வருவதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான சட்ட வழிகாட்டல்கள் தந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மனித உரிமைகள் தளத்தில் ஒன்றிய அளவில் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி வருவதும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களை மக்கள் மன்றத்தில் தரவுகள் மூலமாக எடுத்து வைத்து விவாதத்தை ஏற்படுத்துவதும், மக்கள் விரோத சட்டங்களையும் தோலுரித்து அவற்றிற்கு எதிரான சட்டப் போராட்டங்களை உறுதியுடன் இறுதிவரை எதிர்த்து நிற்பதிலும் மக்கள் கண்காணிப்பகம் எப்பொழும் பின்வாங்கியதில்லை.
முறைகேடு செய்யும் இயக்கங்களை தடைசெய்ய வேண்டும் என ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்தால், இதுவரை வங்கிக் கணக்கு கூட இல்லாத வலதுசாரி இயக்கங்களைத்தான் முதலில் தடைசெய்ய வேண்டும் என்றும், ஆனால் வலதுசாரி இயக்கங்களுக்கு சிவப்புப் கம்பள வரவேற்பு தந்துவிட்டு, மக்களோடு மக்களாக களத்தில் இறங்கிப் போராடும் இயக்கங்களை ஒன்றிய அரசு முடக்க நினைப்பது சனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும் என்றும், பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கருதுகின்றனர்.
- மதுரை வெண்புலி, பாரூக்.
Comments