நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் இழப்பீடு தொகை வசூலிக்க உத்தரவு! அரசுக்கு அதிகப்படியான இழப்பு ஏற்பட காரணமாக இருந்தால் நடவடிக்கை! !

   -MMH 

   கோவை எச்.ஐ.எச்.எஸ்., காலனி மேம்பாலத்துக்கு தேவையான நிலம் கையகப்படுத்துவதில், அரசுக்கு அதிகப்படியான இழப்பு ஏற்பட காரணமாக இருந்த, மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளரிடம் தொகையை வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை, ஒண்டிப்புதுாரில் இருந்து எச்.ஐ.எச்.எஸ்., காலனிக்குச் செல்ல, 2013ல், 21.16 கோடி ரூபாயில், 27 துாண்களுடன் ரயில்வே உயர்மட்ட பாலம் கட்டும் பணி, மாநில நெடுஞ்சாலைத்துறையால் துவக்கப்பட்டது. அணுகுசாலைக்கு போதிய இடம் ஒதுக்காமல், 30 அடி அகலத்துக்கு பாலம் கட்ட ஆரம்பித்ததால், அப்பகுதி மக்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.மனுவை விசாரித்த நீதிபதி, '600 மீட்டர் துாரத்துக்கு அணுகுசாலை அமைத்தபின், பாலம் பணியை தொடர வேண்டும். இழப்பீடு வழங்கிய பிறகே, நிலம் கையகப்படுத்த வேண்டும்' என, உத்தரவிட்டார்.உடனடியாக, மேம்பால வேலை நிறுத்தப்பட்டது. இரு தரப்புக்கும் நடந்த பேச்சுவார்த்தையில், நிலம் கையகப்படுத்த சதுரடிக்கு, 2,600 ரூபாய், இழப்பீடாக வழங்கப்படும் என, உறுதி கூறப்பட்டது. இழப்பீடு தொகையை மூன்று மாதத்துக்குள் வழங்க, ஐகோர்ட் அறிவுறுத்தியது. இருப்பினும், இழப்பீடு வழங்காததால், நில உரிமையாளர்கள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.இதையடுத்து, தமிழக அரசு, நில உரிமையாளர்களுக்கு வழங்க, 29 கோடியே, 37 லட்சத்து, 87 ஆயிரத்து, 910 ரூபாய் ஒதுக்கி, அரசாணை வெளியிட்டது. அரசுக்கு அதிகப்படியான தொகை இழப்பு ஏற்படுவதற்கு காரணமாக இருந்த, மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வதோடு, இழப்பீடு தொகையை, அவரிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டிருந்தது.இந்த அரசாணையை எதிர்த்து, ஐகோர்ட்டில் நெடுஞ்சாலைத்துறையினர் மேல்முறையீடு செய்தனர். அரசு உத்தரவை, அரசு துறையை சேர்ந்தவர்களே எதிர்ப்பு தெரிவித்து, கோர்ட்டுக்குச் சென்றது விமர்சனத்துக்கு உள்ளாகியது. சமீபத்தில் நடந்த வழக்கு விசாரணையில், மேல்முறையீடு மனுவை, நெடுஞ்சாலைத்துறையினர் வாபஸ் பெற்றனர்.'இழப்பீடு ரூ.10 கோடி'மாநில நெடுஞ்சாலைத்துறையினரிடம் கேட்டபோது, 'இழப்பீடு தொகை சதுரடிக்கு ரூ.2,600 என, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அரசு விலை நிர்ணயம் ரூ.1,500. அதை தாண்டி, அதிகமான தொகை நிர்ணயித்ததால், கூடுதல் இழப்பான, 10 கோடி ரூபாயை, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசாணை வெளியிட்டபோது, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மட்டுமே கையெழுத்திட்டுள்ளார். இப்போது, கூடுதல் இழப்பை, அவரிடம் வசூலிக்க வேண்டும் என கூறியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது' என்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments