சாலையில் எரிந்த சொகுசுக்கார்..!!!
திருவண்ணாமலையில் சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் திடீரென தீபற்றி எரிந்த நிலையில், காரில் இருந்தவர் உடனடியாக கீழே இறங்கி உயிர் தப்பினார்.
சென்னையை சேர்ந்த சையது என்பவர் தனது சொகுசு காரில் திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்தார். திருவண்ணாமலை மாவட்டம், காந்திநகர் பைபாஸ் வேட்டவலம் சாலை பிரிவில் வந்தபோது காரின் முன்பகுதியில் திடீரென புகை வெளியேறி உள்ளது. இதனை கவனித்த சையத் உடனடியாக காரை சாலையில் நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் காரில் தீ பற்றி மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. சாலையின் நடுவே கார் தீப்பற்றி எரிந்ததை கண்டு அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.
மேலும், இதுகுறித்து திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். சுமார் அரை மணிநேர போராட்டத்துக்கு பின் தீ கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்த தீ விபத்தில் சொகுசு கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீவிபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-N.V.கண்ணபிரான்.
Comments