ரெயில் தண்டவாளத்தில் தேனீக்கள் ரீங்காரமும் புலி உறுமும் சத்தமுமா...??

    -MMH 

    ரெயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க, ரெயில் தண்டவாளம் அருகே தேனீக்கள் ரீங்காரம், புலி உறுமும் சத்தம் போன்றவை ஒலி பெருக்கி கருவிகள் மூலம் எழுப்பப்படுகிறது.

கோவை-பாலக்காடு ரெயில் தண்டவாளம் வனப்பகுதியில் அமைந்து உள்ளது. அங்கு காட்டு யானைகள் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் அடிபட்டு இறக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. 

அந்த வகையில் கடந்த மாதம் மதுக்கரை அருகே ரெயில் மோதி 3 யானைகள் உயிரிழந்தன. கடந்த 2002-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ரெயில் மோதி மொத்தம் 22 யானைகள் இறந்துள்ளன. 

எனவே ரெயிலில் அடிபட்டு யானைகள் இறப்பை தடுக்க தமிழக- கேரள மாநிலங்களில் உள்ள ரெயில்வே மற்றும் வனத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதன்படி, வனப்பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ரெயிலின் வேகத்தை காலையில் இருந்து மாலை வரை 65 கிலோமீட்டர் வேகத்திலும், இரவு நேரத்தில் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இயக்க ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. 

ஆனால் அதையும் மீறி விபத்துகள் நடைபெற்றன. இந்த நிலையில் தேனீக்களின் ரீங்காரம், புலிகளின் உறுமல் சத்தத்திற்கு காட்டுயானைகள் அச்சப்படும். 

எனவே வனப்பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தின் அருகே தேனீக்களின் ரீங்காரம், புலியின் உறுமல் சத்தம் தொடர்ந்து வரும் வகையில் ஒலிபெருக்கி கருவிகளை வாளையாறு பகுதியில் ரெயில்வே துறையினர் பொருத்தி உள்ளனர். 

இது குறித்து பாலக்காடு மாவட்ட வன அதிகாரி விஜய் ஆனந்த் கூறியதாவது:-"தண்டவாளம் அருகே ஒலிபெருக்கி மூலம் தேனீக்கள் ரீங்காரம், புலி உறுமும் சத்தம் எழுப்பும் திட்டம் முதல்கட்டமாக வாளையார் பகுதி யில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இது வெற்றிகரமாக அமைந்தால் மேலும் பல பகுதிகளில் ஒலி எழுப்பும் கருவிகள அமைக்க உள்ளோம். தேனீக்கள் ரீங்காரம், புலி உறுமும் சத்தம் கேட்டால் யானைகள் தண்டவாளம் அருகே வராது. இதன் மூலம் ரெயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பது தவிர்க்கப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.

கோவை மண்டல வன அதிகாரி ராமசுப்பிரமணியன் கூறுகையில், "வாளையார் பகுதியில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கி கருவியை மதுக்கரையில் பொருத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments