சிங்கம்புணரியில் வீட்டின் காம்பவுண்டுக்குள் பிடிபட்ட மலைப்பாம்பு! பகுதிவாசிகள் பதட்டம்!
சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது51). சிங்கம்புணரியில் மோட்டார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இவர் தனது குடும்பத்தாருடன் அண்ணா நகர் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். தொடர் மழை காரணமாக இவர் வசிக்கும் வீட்டின் காம்பவுண்டுக்குள் செடிகள் அதிகம் வளர்ந்து புதர் மண்டிய நிலையில் இருந்திருக்கிறது.
இந்நிலையில், இன்று காலை வீட்டிற்கு வெளியே காம்பவுண்டுக்குள் வாத்து ஒன்று கத்தும் சத்தம் கேட்டுள்ளது. விரைந்து சென்று பார்த்தபோது அந்த வாத்தை, ஒரு மலைப் பாம்பு விழுங்கிக் கொண்டிருந்திருக்கிறது.
உடனடியாக சிங்கம்புணரியில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையிலான தீயணைப்புப்படையினர், சுமார் 10 அடி நீளமும், 15 கிலோ எடையுமுள்ள அந்த மலைப்பாம்பை, லாவகமாகப் பிடித்தனர். பின்னர், பிடிபட்ட மலைப்பாம்பை வனத்துறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
குடியிருப்புப் பகுதிக்குள் பெரிய மலைப்பாம்பு பிடிபட்டது, அப்பகுதி மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
-பாரூக், ராயல் ஹமீது.
Comments