வங்கிக்கடன் பெற்று தருவதாக கூறி கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து மோசடி! 2பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றன!!
கோவை சரவணம்பட்டி அருகே தொப்பம்பட்டியை சேர்ந்தவர் சுகுமார் (வயது 46). இவர், கணபதி சங்கனூர் ரோட்டில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவருடைய செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், உங்கள் தொழிலை விரிவுபடுத்த வங்கியில் இருந்து ரூ.10 லட்சம் கடன் பெற்று தருவதாகவும், அதற்கு ரூ.1½ லட்சம் கமிஷ னாக தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அதை நம்பிய சுகுமார் சம்மதம் தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து அந்த நபர் மீண்டும் சுகுமாரை தொடர்பு கொண்டு தன்னை சந்திக்க வருமாறு கூறினார். அதன்படி அவர், கணபதி அருகே ஒரு இடத்தில் நின்ற 2 பேரை சந்தித்தார். அவர்கள், செல்போனில் பேசியது தாங்கள் தான் என்றும், தங்களின் பெயர், விக்கி, ஹரி என்று கூறி அறிமுகப்படுத்தி கொண்டனர்.
பின்னர் வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி சுகுமாரிடம் ஆதார் கார்டு உள்பட சில ஆவணங்களின் நகல்களை பெற்று சென்றனர். அவர்கள், நேற்று முன்தினம் சுகுமாரை தொடர்பு கொண்டு வங்கி கடன் ரூ.10 லட்சம் வந்துவிட்டது. அதை பெற்றுக் கொள்ள கமிஷன் தொகை ரூ.1½ லட்சத்துடன் காளப்பட்டி சாலைக்கு வருமாறு கூறினர்.
உடனே சுகுமார் தனது வீட்டில் இருந்து ரூ.1½ லட்சத்தை எடுத்துக் கொண்டு காளப்பட்டி சாலைக்கு சென்றார். அங்கு, தன்னுடன் செல்போனில் பேசியவர்களிடம் ரூ.1½ லட்சம் பணத்தை கொடுத்தார்.
இதையடுத்து அவர்கள், வங்கியில் கடனாக வாங்கிய ரூ.10 லட்சம் இருப்பதாக கூறி ஒரு பெட்டியை கொடுத்தனர். அதை வாங்கிக் கொண்டு சுகுமார் தனது நிறுவனத்துக்கு விரைந்தார். அங்கு அந்த பணப்பெட்டியை திறந்து ரூ.10 லட்சம் ரூபாய் நோட்டு களை எண்ணி சரி பார்க்க தொடங்கினார். அப்போது அந்த 2 பேரும் கொடுத்தது உண்மையான ரூபாய் நோட்டுகள் இல்லை என்பதும், 500 ரூபாய் நோட்டை 2 ஆயிரம் எண்ணிக்கையில் கலர் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்து மோசடி செய்ததும் தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கொடுத்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட 2 மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.
Comments