சட்டசபை பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு! அரசு மருத்துவமனையில் பழுதடைந்துள்ள கட்டில்களை மாற்ற உத்தரவு!!
கோவை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் கட்டில்கள் பழுதடைந்து இருப்பதை கண்ட சட்டசபை பொதுகணக்கு குழுவினர் உடனடியாக மாற்ற உத்தரவிட்டனர். தமிழக சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், இந்த குழுவில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் அருண்குமார், காந்திராஜன், டாக்டர் சரஸ்வதி, சிந்தனை செல்வன், சுதர்சனம், பிரகாஷ், பூண்டி கலைவாணன், ராஜமுத்து, வேல்முருகன், ஜவாஹிருல்லா உள்பட, 11 பேர் பங்கேற்ற ஆய்வு கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதன்பின், குழு தலைவர் செல்வபெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது :
கோவை மாவட்டத்தில் குழு சார்பில் காலை முதல் மாலை வரை பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.கோவை மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க வேளாண் பல்கலையில் ஆய்வு நடத்திய போது தேவையான தொழில்நுட்பகருவிகள் அமைக்கவும், தொழில்நுட்ப நிபுணர்கள் காலி பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்க குழு பரிந்துரைத்துள்ளது. இங்கு மொத்தம், 600 காலிபணியிடங்கள் உள்ளன. இதற்கு உடனடியாக தீர்வு காண பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, அண்ணா பல்கலைக்கு, 12 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் அதற்குரிய கட்டடங்கள் இல்லாததால், 7 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் வீணாக கிடக்கிறது. இதனை கூடிய விரைவில் மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சாய்ந்து படுக்கும் கட்டில்கள் பழுதடைந்துள்ளன. இதனை உடனடியாக மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வனவிலங்கு மோதலை தடுக்க சோலார் மின்வேலிக்கு பதிலாக ஓசூர் தொகுதியில் உள்ளபடி 'சோலார் ரோப்வால்' அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.முதல்வர் உத்தரவின்பேரில் அனைத்து மாவட்டங்களுக்கும் புதுஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, செல்வபெருந்தகை கூறினார்.
எம்.பி.,க்கள் நடராஜன். சண்முகசுந்தரம், கோவை கலெக்டர் சமீரன் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர். செல்வபெருந்தகை கூறுகையில், ''ஆய்வு பணியை தொடர்ந்து பொது கணக்கு குழுவினர் சி.ஏ.ஜி., பரிந்துரைந்த அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் விவாதிக்கப்பட்டது. அப்போது,2016-17ம் ஆண்டில் கோவை மாநகராட்சியில், 71 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது குறித்து விவாதிக்கப்பட்டது. இங்கு எதிர்பார்த்த, 79 சதவீத இலக்கு, வெறும் 39 சதவீதம் தான் அடையப் பட்டுள்ளதாக சி.ஏ.ஜி., அறிக்கை சுட்டிகாட்டியுள்ளது, '' என்றார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.
Comments