தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பளங்களை சீரமைக்கும் பணி தொடங்கியது..!!
தூத்துக்குடி மாவட்டத்தில் மீண்டும் உப்பு உற்பத்திக்காக உப்பளங்களை தயார் செய்யும் பணி தொடங்கி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் ஆறுமுகநேரி வரை உள்ள பல்வேறு பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்து உள்ளன. இவைகளில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. இங்கு கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக உப்பு உற்பத்தி முடிவுக்கு வந்தது.
ஜனவரி மாதம் முதல் உப்பளங்களை அடுத்த சீசனுக்கு தயார் செய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கம் முதல் மழை பெய்யவில்லை. அதே போன்று சில வாரங்களாக நல்ல வெயில் அடித்து வருகிறது. இதனால் உப்பளங்களை சீரமைக்கும் பணி முன்கூட்டியே தொடங்கி உள்ளது. ஏற்கனவே, இந்த ஆண்டு அதிக மழை பெய்ததால் உப்பள பாத்திகளில் அதிக சேதம் ஏற்பட்டு உள்ளது.
இந்த உப்பள பாத்திகளில் உள்ள கழிவுகள், மணல்களை அகற்றும் பணிகள், கரைகளை சரி செய்யும் பணிகள், சாலைகள், பாதைகளை சீரமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டு உள்ளன. சுமார் 70 சதவீதம் உப்பளங்களில் சீரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த பணிகள் ஜனவரி மாதத்துக்குள் முடிக்கப்பட்டு உப்பு உற்பத்தி தொடங்கும். இதே வானிலை தொடர்ந்தால், பிப்ரவரி மாதத்தில் புதிய உப்பு உற்பத்தி செய்யப்படும் என்று உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-வேல்முருகன், தூத்துக்குடி.
Comments