கோவையில் குப்பையை தரம் பிரித்து கொட்ட கூறியதால் துப்புரவு பணியாளர் மீது தாக்குதல்! வடமாநில தொழிலாளி கைது!!

 -MMH 

கோவை உக்கடம் சி.எம்.சி. காலனியை சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய மனைவி ஜோதி என்ற ஜோதியம்மாள்(வயது 56). கோவை மாநகராட்சியில் நிரந்தர துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில் ஜோதியம்மாள் நேற்று காலை 7 மணியளவில் ரங்கே கவுடர் வீதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வசிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி வினோத் ஜெயின்(46) குப்பை கொட்ட வந்தார். உடனே அவரிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து கொட்டுமாறு ஜோதியம்மாள் கூறினார். 

இதனால் ஆத்திரம் அடைந்த வினோத் ஜெயின் திடீரென அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தகாத வார்தைகளால் திட்டியதுடன், தேநீர் குடுவை(‘டீ பிளாஸ்க்’) கொண்டு தலையில் அடித்தார். இதில் ஜோதியம்மாளின் இடது கண் பகுதியில் காயம் ஏற்பட்டது. 

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, வினோத் ஜெயினை வெரைட்டி ஹால் ரோடு போலீசார் கைது செய்தனர். மேலும் கோவை வடக்கு போலீஸ் துணை கமிஷனர் வீரபாண்டி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக ஜோதியம்மாள் தாக்கப்பட்ட தகவல் அறிந்ததும், சக மாநகராட்சி பணியாளர்கள் வெரைட்டிகால் ரோடு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் வினோத் ஜெயின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அதில் உடன்பாடு ஏற்பட்டதால், அனைவரும் கலைந்து சென்றனர். இதற்கிடையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஜோதியம்மாளை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments