கேரளாவில் ஒமைக்ரான்!! தமிழக சோதனைச் சாவடிகளில் தீவிர கட்டுப்பாடு!!
கேரளாவில் 57 பேருக்கு 'ஒமைக்ரான்' உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, தமிழக சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை, 650க்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. இருப்பினும், ஒமைக்ரான் தொற்று, 45 ஆக உயர்ந்துள்ளது.கேரளாவில், 57 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் பறவை காய்ச்சலும் அதிகரித்து வருவதால், எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.கேரளாவிலிருந்து வருவோருக்கு சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட வேறு ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா என, பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கேரளாவில், 57 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. வாளையார், பொள்ளாச்சி எல்லைகள் வழியாக அங்கிருந்து வருபவர்கள், இரண்டு 'டோஸ்' செலுத்திய சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர்., 'நெகட்டிவ்' சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
வெளிநாடுகளிலிருந்து கோவை வரும் விமான பயணிகளிடம், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 'நெகட்டிவ்' வந்தாலும், ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். 8வது நாள் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
-Ln இந்திரா தேவி முருகேசன், சோலை ஜெயக்குமார்.
Comments