கொரோனா விதிமீறலா? அபராதத்துடன் நடவடிக்கை! புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு கோவை மாநகராட்சி எச்சரிக்கை!!
கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கொரோனா விதிகளை மீறும் விடுதிகள், உணவகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில், கோவையில் ஒமைக்ரான் தொற்று பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, சுகாதாரத் துறையினர் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவைக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கட்டாயமாக 7 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்படுகின்றனா். அவர்களை மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர்கள், தினமும் தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு உதவிகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
புத்தாண்டையொட்டி, உணவகங்கள், விடுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும் என்பதால், தனியாா் விடுதிகளில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதலை முறையாகக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதி மீறும் விடுதிகள் மீது அபராதம் மற்றும் சீல் வைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அதேபோல, கொரோனா வழிகாட்டுதல் முறைகளை மக்கள் பின்பற்றுகிறாா்களா என்பதைக் கண்காணிக்க மண்டலத்துக்கு ஒரு குழு வீதம், 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினா், தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு விதிமீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-சோலை ஜெய்க்குமார், Ln. இந்திராதேவி முருகேசன்.
Comments