"சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குக'"- மத்திய அரசு வலியுறுத்தல்!!
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருக்கிறது.
தினசரி கொரோனா பாதிப்பு இந்தியாவில் இன்று 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகியிருக்கிறது. இதனால் மத்திய அரசு அந்தந்த மாநிலங்களுக்கு தனித்தனியாக அறிவுறுத்தல்களை வழங்கவுள்ளதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் பல்வேறு அறிவுறித்தல்களை வழங்கியுள்ளார்.
அதில், வெளிநாடுகளிலிருந்து சென்னை வரும் பயணிகளை கண்காணிக்கவேண்டும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி மத்திய அரசு இந்த அறிவுரையை வழங்கியிருக்கிறது.
மேலும் இதனை கண்காணிக்காவிட்டால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கூறியிருக்கிறது. தொடர்ந்து மத்திய அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும், ஆர்டி- பிசிஆர் சோதனைகளை அதிகரிக்கவும் கூறியுள்ளது. இதேபோல், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா போன்ற அனைத்து மாநிலங்களுக்கும் தனித்தனி அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது.
-வேல்முருகன், சென்னை.
Comments