மதுரையில் பொய்க் குற்றச்சாட்டில் சித்ரவதை! 4 இசுலாமியர்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
மதுரையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் பசுவின் தலையை வீசிச் சென்றதாக சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட 4 இஸ்லாமியர்களை, குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு துன்புறுத்திய காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு மர்மநபர்கள் சிலர், பசுவின் தலையை வீசிச் சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் சாகுல் ஹமீது, அல் ஹஜ், ரபீக் ராஜா, ஷாயின்ஷா ஆகியோரை கைது செய்தனர். சிறப்புப்படை உதவி ஆய்வாளர்கள் பார்த்திபன், வெங்கட்ராமன் உள்ளிட்ட 6 காவல்துறை அதிகாரிகள், கைது செய்த நால்வரையும் செல்லூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.
அப்போது தண்ணீர், உணவு கூட தராமல் குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு காவல்துறையினர் தங்களை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதாக இந்த வழக்கில் பிணையில் வெளியே வந்த நால்வரும் சென்னையில் உள்ள மனித உரிமை ஆணையத்தில் புகாரளித்தனர்.
மனுவை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையர் ஜெயசந்திரன், சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்துப் பார்க்கும் போது காவல்துறையினர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாகக் கூறினர்.
எனவே, பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு தமிழக அரசு தலா 1 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மனுதாரர்களில் ஒருவரான சாகுல் ஹமீது இறந்துவிட்டதால், அவருக்கான இழப்பீட்டினை அவரது தாயார் அல்லது மகனிடம் வழங்க வேண்டும் எனவும் ஜெயசந்திரன் ஆணையிட்டுள்ளார். மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள உதவி ஆய்வாளர்கள் பார்த்திபன், வெங்கட்ராமன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கணேசன், மோகன், தலைமை காவலர் சங்கர நாராயணன், காவலர் சித்திரவேல் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது.
- மதுரை வெண்புலி.
Comments