உதவி செய்றன்னு உல்டா அடித்து விடுகிறார்கள்! விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்வதுபோல் நடித்து நகையை திருடிய ஆசாமி!!
சரவணம்பட்டியில் விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்வதுபோல் நடித்து தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்.போலீஸ் விசாரணை. கோவை ராமகிருஷ்ணன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 49). இவரும் இவரது மனைவியும் சம்பவத்தன்று மார்க்கெட்டுக்கு சென்று விட்டு சரவணம்பட்டியில் இருந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இவர்கள் வந்த இரு சக்கர வாகனம் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் சின்னசாமியின் மனைவிக்கு கை கால்கள் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த இடத்துக்கு வந்த மர்ம நபர் ஒருவர் காயம் ஏற்பட்ட சின்னசாமியின் மனைவியை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். பின்பு சிறிது நேரம் கழித்து மாயமாகியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனைவியை பார்க்க சென்ற போது மனைவி கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க சங்கிலி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த சின்னசாமி, இதுபற்றி சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் மர்ம நபரை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆபத்தில் இருந்தவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து நகையை திருடிச் சென்ற மர்ம நபரின் இந்த செயல் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமானம் மரித்து விட்டதோ? என்ற என்னத்தை மக்கள் மனதில் எழுப்பியுள்ளது இச்சம்பவம்.
-முகமது சாதிக் அலி.
Comments