மாணவியின் மரணத்திற்கு உரிய நீதி கேட்டு போராட்டம்! இரண்டாவது நாளாக தொடர்ந்து போராடும் பொதுநல அமைப்புகள்!
கோவையில் உள்ள தனியார் பள்ளி இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி (வயது 31) அளித்த பாலியல் தொல்லை காரணமாக கோவையை சேர்ந்த 17 வயது மாணவி கடந்த 11-ந் தேதி வீட்டின் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் மாலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதற்கிடையே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் மாணவி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரி மாணவியின் உடலை வாங்க மறுத்து நேற்று முன்தினம் இரவில் கோவை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அரங்கு முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடலை வாங்க மறுத்தனர். இதையடுத்து 2-வது நாளாக நேற்று காலை கோவை அரசு ஆஸ்பத்திரி முன்பு மாணவர் அமைப்பினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே மாதர் சங்கம், எஸ்.டி.பி.ஐ., தந்தை பெரியார் திராவிடர் கழகம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், பொது நல மாணவர் எழுச்சி இயக்கம் உள்ளிட்ட அமைப்பினர் தற்கொலை செய்த மாணவியின் வீட்டுக்கு நேற்று காலை வந்தனர்.
அவர்கள் மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் அவர்கள், மாணவியின் வீட்டின் முன் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள், பள்ளி ஆசிரியரை கைது செய்தது போன்று, மாணவி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வரை உடனே கைது செய்ய வேண்டும், பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
அதே கோரிக்கையை வலியுறுத்தி பெண் விடுதலை கட்சியின் நிறுவனர் சபரிமாலா கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே திடீரென தரை யில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை ரேஸ் கோர்ஸ் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் விடுவிக்கப்பட் டார். இதைத்தொடர்ந்து மாணவி வீடு மற்றும் கோவை அரசு ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் மாணவியின் உடலை உறவினர்கள் பெற்றுச் செல்ல வில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-S.ராஜேந்திரன்.
Comments