வால்பாறை பகுதியில் குவிந்து வரும் குப்பைகள்! சமூக அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டுமென வேண்டுகோள்! !
வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அட்டகட்டி முதல் வால்பாறை வரும் வழியிலும், வால்பாறையில் இருந்து சோலையாறு அணை, நீரார்அணை, கருமலை செல்லும் வழியிலும் ஆங்காங்கே சாலையோரங்களில் நின்று உணவு அருந்துகின்றனர்.பலர் மது அருந்துகின்றனர். இவர்கள் அனைவருமே இதனால் ஏற்படக்கூடிய மீதியான உணவு பொருட்களையும், மது பாட்டில்களையும், காலியான தண்ணீர் பாட்டில்களையும், குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பேம்பர்சுகளையும் சாலயோரங்களில் வீசியெறிந்து செல்கின்றனர்.
உள்ளூர் வாசிகளும் தங்களது கடைகள், வீடுகளில் ஏற்படும் குப்பை கழிவுகளை சாலையோரங்களில் வீசியெறிந்து வருகிறார்கள். சுற்றுலா பயணிகளின் அத்து மீறல் காரணமாக வால்பாறை குவியும் குப்பைகளால் திணறி வருகிறது.
இது குறித்து வால்பாறை நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் கூறியதாவது:-
"குப்பைகளால் வால்பாறை பகுதி அசுத்தமடைவதோடு, சாலையோர பகுதிகள் முழுவதும் துர்நாற்றம் வீசுகின்றன.குறிப்பாக அதிகளவிலான பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு வால்பாறை பகுதியில் பெய்யும் மழையில் இந்த பிளாஸ்டிக் பொருட்கள் குப்பைகள் மழைத் தண்ணீரில் அடித்துச் சென்று சாலையோரங்களில் உள்ள மழைத் தண்ணீர் வடிகால்களிலும், நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் சாக்கடைகளிலும் அடைத்துக் கொள்கின்றன. இதனால் மழைத் தண்ணீர் முறையாக வடிந்து ஆறுகளில் சென்று சேரமுடியாமல் ஆங்காங்கே தடைபட்டு நகரில் உள்ள சாலையில் மழைத் தண்ணீர் செல்லும் நிலை ஏற்படுகிறது.
இதனால் இந்த குப்பைகளும் மழைத் தண்ணீரில் அடித்து வரப்பட்டு நடைபாதை மற்றும் சாலைகளுக்கு வந்து விடுகிறது. இதனால் கனமழை பெய்து ஒய்ந்தவுடன் பார்த்தால் குப்பைகளும் பிளாஸ்டிக் பொருட்களும் ரோட்டில் குவிந்து விடுகிறது. இந்த குப்பைகளை அகற்றும் பணியை சுகாதார பணியாளர்கள் சிரமத்திற்கு மத்தியில் மேற்கொண்டு வருகின்றனர்.
வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் வாகனங்களில் செல்லும் போது குப்பைகளை வெளியே வீசியெறிவதையும், ஆங்காங்கே சாலையோரங்களில் அமர்ந்து சாப்பிடும் போது ஏற்படும் கழிவுகளையும் காலியான தண்ணீர் பாட்டில்களையும் சாலையோரத்தில் வீசியெறிந்து செல்ல வேண்டாம். வால்பாறை நகர் பகுதி மற்றும் பல்வேறு இடங்களுக்கு செல்லும் வழியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. குப்பைகளை குப்பை தொட்டியில் போடுங்கள்,வால்பாறை பகுதியை தூய்மையாகவும் சுகாதாரமான முறையிலும் பாதுகாக்க உதவுங்கள்.
நீங்கள் சர்வசாதாரணமாக பொது நலனை கருத்தில் கொள்ளாமல் சாலையோரத்தில் வீசியெறிந்து வரும் குப்பைகளை உங்களை போன்ற மனிதர்களான தூய்மை பணியாளர்கள் எவ்வளவு சிரமத்திற்கு மத்தியில் அகற்றி வருகிறார்கள் என்பதை உணர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். சமுதாய அக்கறையோடு நடந்து கொள்ள வேண்டும்."
இவ்வாறு அவர் கூறினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-S.ராஜேந்திரன்,
திவ்ய குமார் வால்பாறை.
Comments