ஆபத்தை உணராத சுற்றுலாப்பயணிகள்! எச்சரிக்கையையும் மீறி தடுப்பணையில் குளிப்பவர்களால் அச்சம்! !

 

-MMH

     பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை மற்றும் பூங்காவை சுற்றி பார்க்க கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகின்றனர். இந்த நிலையில் அணைக்கு எதிரே உள்ள தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்கின்றனர். அங்கு உள்ள சுழல் மற்றும் ஆழம் தெரியாமல் குளிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதற்கிடையில் தற்போது அணை நிரம்பி முழுகொள்ளளவை எட்டி உள்ளது.

இந்த நிலையில் மழையின் காரணமாக அணையில் இருந்து அடிக்கடி உபரிநீர் திறக்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தடுப்பணையில் குளித்த சுற்றுலா பயணிகள் 2 பேர் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். பின்னர் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதை தொடர்ந்து போலீசார் மற்றும் பொதுப்பணித்துறை மூலம் அங்கு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி சுற்றுலா பயணிகள் குளிப்பதால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

ஆழியாறு தடுப்பணையில் மூழ்கி சுற்றுலா பயணிகள் பலர் உயிரிழந்து உள்ளனர். இந்த நிலையில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையில் இருந்து திடீரென்று உபரிநீர் திறக்கப்படுகிறது. மேலும் தடுப்பணையின் ஆழம், சுழல் தெரியாமல் சுற்றுலா பயணிகள் சிக்கி கொள்வதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தற்போது தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதை தடுக்க போலீசார், பொதுப்பணித்துறை மூலம் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் அதையும் மீறி சுற்றுலா பயணிகள் தடுப்பணைக்கு குளிக்க செல்கின்றனர். மேலும் எச்சரிக்கை பலகையை துணி காய போடுவதற்கு பயன்படுத்துகின்றனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கை பலகை மட்டும் வைத்தால் போதாது சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் போலீசார் அல்லது பொதுப்பணித்துறை ஊழியர்களை அங்கு பணி அமர்த்த வேண்டும். மேலும் தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-S.ராஜேந்திரன்.

Comments