மருதமலையில் இன்று சூரசம்ஹார விழா! பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

-MMH

   தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்து முருகன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வார்கள்.  சூரபத்மனை, முருகப்பெருமான் வதம் செய்யும் நாளன்று முருகப்பெரு மானை தரிசனம் செய்து பக்தர்கள் விரதத்தை முடிப்பார்கள். 

கோவையை அடுத்த மருதமலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவில் பக்தர்களால் 7-வது படைவீடு என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் காலையிலும், மாலையிலும் வேள்வி பூஜை நடைபெற்றது. சூரசம்ஹார விழாவையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோ பூஜை, 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

 அதைத்தொடர்ந்து பால், பன்னீர், மஞ்சள் ஜவ்வாது போன்ற 16 வகை யான வாசனை திரவியங்களால் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அதைத்தொடர்ந்து சண்முகார்ச்சனை நடக்கிறது. மதியம் அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி, மதியம் 3 மணிக்கு முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

நாளை (புதன்கிழமை) காலை சுப்பிரமணிய சுவாமி, வள்ளி - தெய்வானை திருக்கல்யாணம் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறு கிறது. இதிலும் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

இது போல் கோவையில் உள்ள முருகன் கோவில்களிலும் சூரசம்ஹார விழா இன்று நடைபெற உள்ளது. காந்திபார்க் பாலதண்டாயுதபாணி கோவிலில் அசுரர்களின் உருவபொம்மைக்கு வர்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-S.ராஜேந்திரன் .

Comments