வீடியோ எடுத்தவருக்கு அடி உதை!!
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பிள்ளையார் புரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் வயது 36, கூலித்தொழிலாளி. இவர் தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வருகிறார். அடிக்கடி அந்த நாயை அடித்து துன்புறுத்தி வந்தார். நேற்று மீண்டும் அவர் தனது நாயை அடித்து துன்புறுத்தினார்.
இதனை பார்த்த சதீஷ்குமாரின் தங்கை கணவர் நவீன் என்பவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார். பின்னர் அந்த வீடியோ உடன் விலங்குகள் நல வாரியத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசில் வளர்ப்பு நாயை தாக்கிய சதிஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
போலீசார் அவரை அழைத்து விசாரணை நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் போலீசில் புகார் கொடுத்த நவீன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். அவரிடம் எதற்காக வீடியோ கொடுத்து புகார் செய்ததாக மிரட்டினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சதீஷ் நவீனை உருட்டு கட்டையால் தாக்கினார். அவரது இடது கால் உடைந்து படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேலும் வீட்டில் நின்ற காரையும் சேதப்படுத்தி விட்டு தப்பிச்சென்றார் இதுகுறித்து நவீனின் மனைவி மணிமேகலை போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப் கோவை.
Comments