பொள்ளாச்சி அருகே பரபரப்பு.!! திருட்டு வழக்கில் கணவன், மனைவி கைது..!
பொள்ளாச்சி நாச்சிகவுண்டர் வீதியை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி ஜெயலட்சுமி (76). கடந்த 2-ந்தேதி மாலையில் வீட்டில் தனியாக இருந்த அவர் துணி காய போட்டுக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு ஆணும், பெண்ணும் திடீரென்று வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்களிடம் ஜெயலட்சுமி யார் என்று கேட்பதற்குள், 2 பேரும் அந்த மூதாட்டியை கீழே தள்ளினர்.
மேலும் அவர் சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை திணித்ததாக தெரிகிறது. இதையடுத்து ஜெயலட்சுமியின் கழுத்தில் கிடந்த நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி துணை சூப்பிரண்டு தமிழ்மணி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராம்தாஸ் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் சம்பவ நடந்த நேரத்தில் 2 பேர் மட்டும் நடந்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த டிரைவர் சஞ்சய் (21), அவரது மனைவி சுருதி (20) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது திருடியதை ஒப்புக் கொண்டனர்.
கடன் தொல்லை மற்றும் தீபாவளி செலவிற்கு பணம் இல்லாததால், மூதாட்டி ஜெயலட்சுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-M.சுரேஷ்குமார்.
Comments