தேவகோட்டை அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த தங்கையைக் காப்பாற்றிய அக்கா!!
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை அடுத்த வெட்டுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 50). இவரது மகள்கள் தேவிஸ்ரீ (14) ஹர்சிணி (9). சிறுமிகள் இருவரும் சில தினங்களுக்கு முன், மாலை நேரத்தில் ஊருக்கு வெளியே காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீெரன்று சிறுமி ஹர்சிணி காட்டு பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் தடுமாறி விழுந்தாள். காப்பாற்றுமாறு அக்காவை நோக்கி கூக்குரலிட்டாள்.
சத்தம் கேட்டு தேவிஸ்ரீ அங்கு ஓடி வந்தாள். அதற்குள் ஹர்சிணி மண்ணுக்குள் புதையத் தொடங்கினாள். சிறிது நேரத்தில் தங்கையின் உடல் முழுவதும் உள்ளே சென்று அவளது தலை மட்டும் வெளியே தெரிந்தது. இதனால் பதறிப் போன தேவிஸ்ரீ அலறியபடி, தங்கையைக் காப்பாற்றுவதற்காக ஹர்சிணியின் தலைமுடியைப் பிடித்து மேலே தூக்கினாள். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்து அவர்களும் சேர்ந்து அந்தச் சிறுமியை வெளியே தூக்கினர். அப்போதுதான் சிறுமி உள்ளே விழுந்தது, மூடப்படாத ஆழ்துளைக் கிணறு என தெரிய வந்தது.
காட்டுப்பகுதியில் போடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் கிடைக்காததால், ஒப்பந்ததாரர்கள் குழாயை எடுத்து விட்டு, மேலோட்டமாக மண்ணைப்போட்டு மூடிச் சென்றிருக்கிறார்கள். சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அந்த பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறு பள்ளமாக மாறியுள்ளது. இது தெரியாமல் ஆடு மேய்த்த அந்தச் சிறுமி தவறி உள்ளே விழுந்திருக்கிறாள். ஆழ்துளைக் கிணற்றுக்குள் நெற்றி வரை சென்றுவிட்ட சிறுமி மீட்கப்பட்ட சம்பவம், கிராம மக்களிடம் அதிர்ச்சியையும் மகிழ்சியையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தகவலறிந்ததும் தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், தாசில்தார் அந்தோணிராஜ் மற்றும் மருத்துவ குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அந்த மாணவியை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து நலமுடன் இருப்பதாக அறிவித்தனர். இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் அறிந்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அந்த ஆழ்துளைக் கிணற்றை உடனடியாக மூடும்படியும், இதற்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.
- ராயல் ஹமீது.
Comments