மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்துவிட்டார்!!இளைஞரை காப்பாற்றி தக்க நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்த ஆய்வாளர்!!

 -MMH

மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்துவிட்டார் என்று கருதப்பட்ட இளைஞரை காப்பாற்றி தக்க நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க உதவிய அண்ணா நகர் ஆய்வாளர் ராஜேஸ்வரி!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிகப்படியான மழை பெய்துவருகிறது.

சென்னையில், கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மழை பெய்துவருவதால், சாலைகளிலும், குடியிருப்புகளிலும் மழை வெள்ளம் புகுந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனர். கடந்த 6ஆம் தேதி இரவு சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக சென்னையின் பல முக்கிய இடங்களிலும், தண்ணீர் தேங்கி நின்று மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகமும், அரசும் மழை வெள்ளத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவந்தனர். அதன் மூலம் மழை வெள்ளம் சற்று வடிந்தபோதும், பல்வேறு இடங்களில் மழை நீர் வடியாமல் அப்படியே இருந்தது.

இந்நிலையில், வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று (10.11.2021) இரவு முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்மழை பெய்துவருகிறது. அதுமட்டுமின்றி அந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே மாமல்லபுரத்திற்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையில் கடக்கவிருப்பதால், நேற்று இரவு முதலேயே சென்னையில் பலத்த காற்று வீசத் துவங்கியுள்ளது. இதனால், பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. அதனை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகமும், அரசும் ஈடுபட்டுவருகிறது.

அந்த வகையில் சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் சாய்ந்த மரங்களை அக்கல்லறையில் பணி செய்யும் ஊழியரான உதயகுமார் என்பவர் அப்புறப்படுத்தியிருக்கிறார். இந்நிலையில், அவர் இன்று காலை அந்தக் கல்லறையில் மயங்கிய நிலையில் விழுந்திருப்பதாக கீழ்ப்பாக்கம் டி.பி.சத்திரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு சென்ற அவர், முறிந்து விழுந்திருந்த மரங்களை விரைவாக அப்புறப்படுத்தி, அதனுள் மயங்கிய நிலையில் இருந்த உதயகுமாரை மீட்டு, தன் தோளில் சுமந்துவந்து ஓர் ஆட்டோவில் ஏற்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். தற்போது, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், உதயகுமார் சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும், இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

-Ln இந்திராதேவி முருகேசன், சோலை ஜெய்க்குமார்

Comments

Unknown said…
காவல் ஆய்வாளர் அவர்களும் பெண்தானே தாயுள்ளம் கொண்ட அம்மையாருக்கு தலைவணங்கி பாராட்டுகிறேன்
Unknown said…
காவல் ஆய்வாளர் அவர்களும் பெண்தானே தாயுள்ளம் கொண்ட அம்மையாருக்கு தலைவணங்கி பாராட்டுகிறேன்