தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் குளத்தில் தண்ணீர் திறப்பு!!
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் 74 குளங்கள் நிரம்பின. காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தூத்துக்குடி கோரம்பள்ளம் குளம் நிரம்பியதால், தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில்தான் கடந்த 20-ந் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் வயல்வெளிகள் மழைநீரால் நிரம்பி நிற்கிறது. அதே போன்று தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த தண்ணீர் கோரம்பள்ளம் குளத்துக்கு வந்தடைந்தது. இதனால் குளத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதைத் தொடர்ந்து அதிகப்படியான தண்ணீர் உப்பாற்று ஓடையில் திறந்து விடப்பட்டு உள்ளது. கோரம்பள்ளம் குளத்தின் கரையோரத்தில் இருந்த ஒரு பழமையான மரமும் வேரோடு சாய்ந்தது.
விளாத்திகுளம் தாலுகா புதூர் வட்டாரத்தில் சுமார் 700 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டு உள்ள மக்காச்சோளம், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் மழையால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. அங்கு வயல்களில் தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதே போன்று மாவட்டத்தில் ஏராளமான வாழை பயிர்களை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. இதனால் வாழைகள் சேதமடையும் நிலையில் உள்ளது. உடனடியாக தண்ணீரை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலையில் லேசான சாரல் மழை பெய்தது. அதன்பிறகு வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. தூத்துக்குடி மாநகரில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை:-
திருச்செந்தூர் 2 காயல்பட்டினம் 2, விளாத்திகுளம் 10, காடல்குடி 23, வைப்பார் 14, சூரங்குடி 60, கோவில்பட்டி 22, கழுகுமலை 10, கயத்தாறு 12, கடம்பூர் 11, ஓட்டப்பிடாரம் 48, மணியாச்சி 23, வேடநத்தம் 15, கீழஅரசடி 1, எட்டயபுரம் 48.2, சாத்தான்குளம் 9.5, ஸ்ரீவைகுண்டம் 4, தூத்துக்குடி 5.2 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.
74 குளங்கள் நிறம்பின:
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையில் இதுவரை வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகமாக மழை பெய்து உள்ளது. இதனை தொடர்ந்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரகவளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 639 குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் அனைத்தும் கண்காணிப்பில் வைத்து உள்ளோம். இதில் 74 குளங்கள் 75 சதவீதத்துக்கு அதிகமாக நிரம்பி உள்ளன. இந்த குளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. குளக்கரையில் ஏதேனும் உடைப்பு ஏற்படும் நிலை இருந்தால் உடனடியாக அதனை மணல் மூட்டைகளை அடுக்கி சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மழையால் சாலைகளில் ஏற்பட்டு உள்ள குழிகளை சீரமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டு உள்ளன.
-வேல்முருகன், தூத்துக்குடி.
Comments