மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா! பக்தர்களுக்கு அனுமதி இன்றி நடைபெற்றது! !

   -MMH 

   கோவையை அடுத்த மேற்கு மலை தொடர்ச்சி மலையில் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இது முருகனின் 7-வது படைவீடு என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. இங்கு கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் கடந்த 5- ந் தேதி தொடங்கியது.

இதையொட்டி தினமும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோ பூஜை, சத்ரு சம்ஹார வேள்வி, விநாயகர் பூஜை, சண்முக அர்ச்சனை ஆகியவை நடைபெற்றது. கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நேற்று நடைபெற்றது. 

இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.  மூலவருக்கு பால், பன்னீர், ஜவ்வாது, சந்தனம் போன்ற 16 வகையான  திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. 

மதியம் 3 மணியளவில் சுவாமி அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னை பராசக்தியிடம் வேலை பெற்றுக் கொண்ட சுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் கோவிலின் முன்புறம் எழுந்தருளினார்.

வீரபாகுதேவர் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி னார். பின்னர் அவர்கள் கோவிலை சுற்றி வீதி உலா வந்தனர். 

இதைத்தொடர்ந்து முருகப்பெருமான் முதலில் தாரகாசுரனை வதம் செய்தார். இரண்டாவதாக பானுகோபனை வதம்செய்தார். 3-வதாக சிங்க முகாசுரனை வதம் செய்தார். 4-வதாக சூரபத்மனின் தலையை வேலால் துண்டித்து முருகப்பெருமான் வதம் செய்தார். 

அப்போது அங்கு கூடியிருந்த சிவாச்சாரியார்களும், கோவில் ஊழியர்களும் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, என பக்தி முழக்கமிட்டனர். இதையடுத்து சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமானின் கோபம் தணிக்கும் விதமாக மகா அபிஷேகம் நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். பின்னர் மகாதீபாராதனை நடந்தது. சூரசம்ஹார விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை. கோவில் ஊழியர்கள் மட்டும் பங்கேற்றனர். 

இன்று (புதன்கிழமை) காலை கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாண விழா நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பாத காணிக்கை செலுத்துதல், பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது. 

பின்னர் முருகப்பெருமான் வள்ளி- தெய்வானையுடன் யானை வாகனத்தில் கோவிலை சுற்றி வீதிஉலா வருகிறார். இதிலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நேற்று மருதமலையில் சூரசம்ஹார நிகழ்ச்சியை புகைப்படம் மற்றும் செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள் மலையடிவாரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். 

இதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகத்தினர், மலைக்கு மேலே கோவிலுக்கு செல்ல நிருபர்களுக்கு அனுமதி அளித்தனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments