வால்பாறை அரசு பள்ளியில் படித்த மூன்று மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி! பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு! !
வால்பாறை அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 7 மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். இதில் வால்பாறை ஈட்டியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த தோட்ட தொழிலாளி பூவலிங்கம் மகள் தர்சினி நீட் தேர்வில் 133 மதிப்பெண்ணும், பச்சைமலை எஸ்டேட் பகுதியை சேர்ந்த தொழிலாளி பால்முருகன் மகள் மகாலட்சுமி நீட்தேர்வில் 109 மதிப்பெண்ணும், உருளிக்கல் பெரியார் நகர் எஸ்டேட் தொழிலாளி கண்ணன் மகள் மிதுனா 109 மதிப்பெண்ணும் பெற்றனர்.
இந்த தேர்ச்சி பெற்ற மாணவிகளை குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் ராபின்சன் கூறுகையில்,அன்றாட பாடங்களை படித்துக்கொண்டு பள்ளி கல்வித்துறை உத்தரவின் பேரில் நீட் தேர்விற்கான பயிற்சியும் மூன்று மாணவிகளுக்கும் வழங்கப்பட்டது. நீட் தேர்விற்கான பயிற்சி வினாத்தாள்கள் பள்ளி கல்வித்துறையின் மூலம் வழங்கப்பட்டது.அந்த வினாத்தாள்கள் மூலமாக மாணவிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டும் 7 மாணவிகள் நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று வருகின்றனர். எங்கள் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்த வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் மூன்று பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது எங்கள்பள்ளிக்கு பெருமையும், மற்ற மாணவிகளுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த 3 மாணவிகளின் மேல்படிப்பிற்காக எஸ்டேட் நிர்வாகங்கள் வால்பாறையில் உள்ள பல்வேறு அமைப்புகள் உதவுவதற்கு முன்வரவேண்டும் என்றார்.
3 மாணவிகளுக்கு வால்பாறை வட்டார கல்வி அலுவலர்கள் காளிமுத்து, யோகேஷ்வரி அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், வால்பாறை பகுதியில் உள்ள பல்வேறு அமைப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-S.ராஜேந்திரன், திவ்யா குமார் (வால்பாறை).
Comments