கோவையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது! காவல்துறையினர் விசாரணை!

 

-MMH

     கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் லோகேஷ் அரவிந்த் (வயது 28). இவர் வேலை வாங்கி கொடுக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மேட்டுப்பாளையம் தாசனூரை சேர்ந்த மோகன் (வயது 30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அவர் லோகேஷ் அரவிந்திடம், அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தனது உறவினர் அதிகாரியாக வேலைபார்ப்பதாக தெரிவித்தார். மேலும் வேளாண்மைத்துறையில் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் அலுவலக உதவியாளர், ஆய்வக உதவியாளர் போன்ற பணிகள் காலியாக இருப்பதாகவும் பணம் கொடுத்தால் உறவினர்களிடம் கூறி வேலை வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார்.

இதனை உண்மை என்று நம்பிய லோகேஷ் அரவிந்த், தன்னிடம் வேலைகேட்டு வந்த 18 பேரிடம் மொத்தம் ரூ.50 லட்சம் பெற்று, அந்த பணத்தை மோகனிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட மோகன் போலியான ஆவணங்கள் தயாரித்து, வேலைக்கான ஆணை என்று கூறி பணம் கொடுத்தவர்களிடம் வழங்கியுள்ளார்.

அவர்கள் ஆவணத்துடன் வேலைக்கு சென்றபோது, அது போலியானது என்று தெரியவந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை கேட்டு லோகேஷ் அரவிந்தை தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். இதுகுறித்து அவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில், போலீஸ் துணை சூப்பிரண்டு சேகர் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

விசாரணை முடிவில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த மோகனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மோகன் அளித்த வாக்குமூலத்தில், "பணக்காரராக ஆகும் ஆசையில் குறுக்கு வழியில் சென்று பணம் சம்பாதிக்க திட்டமிட்டேன். இதனால் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சத்தை பெற்றுக்கொண்டு போலி வேலைவாய்ப்பு ஆணை வழங்கினேன். அந்த மோசடி பணத்தில் டிராவல்ஸ் நிறுவனத்தை தொடங்கி 2 கார்களை வாங்கி தொழில் செய்து வந்தேன்" என்று கூறியுள்ளார். 

மோசடி செய்த பணத்தை மோகன் தன்னுடைய மனைவி மற்றும் தாய் வங்கி கணக்கில் போட்டு செலவு செய்துள்ளார். எனவே இந்த மோசடியில் தொடர்புடைய அவருடைய மனைவி சோபனா பிரியா (27) மற்றும் தாய் மணி (51) ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான மோகனை போலீசார் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-S.ராஜேந்திரன்.

Comments