நிலக்கோட்டை அருகே கார் மீது இருசக்கர வாகனம் மோதி கோர விபத்து! இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி!
மதுரை பெங்குடியைச் சேர்ந்தவர் வேதமாணிக்கம். இவரது மகன் காமு என்ற காமராஜ் (வயது 21). அதே பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் அஜீத் கண்ணன் (21). நண்பர்களான காமராஜ் மற்றும் அஜீத்கண்ணன் ஆகிய இருவரும், சக நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் மதுரை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்களது இருசக்கர வாகனம் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்துள்ள சிலுக்குவார்பட்டி அருகே, மதுரை வத்தலகுண்டு பிரதான சாலையில் வந்தபோது எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக, அஜித் கண்ணன் திரைப்படங்களில் காட்டப்படுவது போல மோட்டார் சைக்கிளிலிருந்து பல மீட்டர் உயரே பறந்து சென்று சாலையின் குறுக்கே சென்ற உயர் மின்னழுத்தக் கம்பியில் தொங்கினார்.
அதேபோன்று, காமு என்ற காமராஜ் அங்கிருந்த காட்டுப் பகுதியில் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேரும் பரிதாபமாக இறந்து போனார்கள். இதுகுறித்து தகவலறிந்த நிலக்கோட்டை காவல்துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று, இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் சிக்கிய கார், சிவகங்கையிலிருந்து, கொடைக்கானலை அடுத்துள்ள பண்ணைக்காடு சென்றதாகத் தெரிய வந்தது. அந்த காரின் ஓட்டுநரான தர்மராஜ் (50) என்பவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் குறித்து நிலக்கோட்டை சார்பு ஆய்வாளர் தயாநிதி வழக்குப்பதிவு செய்தார். காவல் ஆய்வாளர் குரு வெங்கட்ராஜ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-பாரூக், ராயல் ஹமீது.
Comments